“திருட முடியாத ஒரே சொத்து கல்விதான். அதனால்தான் தமிழக அரசு பள்ளிக் கல்விக்கு மிக மிக மிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான தொடக்க விழா சென்னை திருவல்லிக்கேணி லேடி விலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்சியில் பள்ளி் மேலாண்மைக் குழு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நம் பள்ளி, நம் பெருமை என்கிற பிரச்சார வானகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பினை முதல்வர் பார்வையிட்டார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் முன்பு பள்ளி மேலாண்மை குழு தேர்தல். குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றது. லதாசுரேஷ் என்பவர் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், பள்ளியின் புதிய மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு உறுதிமொழி செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், தயாநிதிமாறன் எம்பி் . கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளியின் மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “பள்ளிப் பருவம் என்பது திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம். இங்கிருக்கும் மாணவர்களை ஏக்கத்துடன் வாழ்த்துகிறேன். இந்த பருவத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் வேறு எந்த பருவத்திலும் கிடைக்காது. இந்த பருவத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும்.
இப்பள்ளி சுப்புலட்சுமி அம்மையாரால் சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்டு 1914 ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளியாக இருந்தது. பின்பு 1921 கட்டடம் கட்டப்பட்டு லேடி வில்லிங்டன் உயர்நிலைப் பள்ளியாக பெயர் மாற்றப் பட்டது. 1922 டிசம்பர் 19 ல் இப்பள்ளி தொடங்கியது. `ஒருமைக்கண் தான் கற்ற கல்வி' என்ற குறளை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். அந்த குறள் சொல்வது, `திருட முடியாத ஒரே சொத்து கல்விதான்’ என்பது. அதனால்தான் தமிழக அரசு, பள்ளிக் கல்விக்கு மிக மிக மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
பெற்றோர்களுக்காக கவிதையொன்றை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன். `உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வாழ்கிறார்கள், வருகிறார்கள். ஆனால் உங்களிலிருந்து வரவில்லை. அவர்களுக்கு நீங்கள் அன்பை தரலாம;. சிந்தனையை அல்ல. அவர்களை உங்களைப் போல் ஆக்க நினைக்காதீர்கள்...' என்ற கலீல் ஜிப்ரான் வரிகள்தான் அவை. இதேபோல் `பெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்களது கனவுகளை திணிக்காதீர். புத்தகங்களிலேயே குழந்தைகளை கழித்து விடாதீர்கள்’ என்றார் அப்துல் ரகுமான். சமூக முன்னேற்றத்தின் திறவுகோல், மாணவர்களுக்கான கல்விதான். அதற்கு உதாரணமாக பள்ளி கல்வியில் இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
இந்த நிதி நிலை அறிக்கையில் ரூ. 36,892 கோடி பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டது. அரசுப் பள்ளிகள் அனைத்தும் தன்னிறைவு பெற வேண்டும், தரமான, சமாமன கல்வி குழந்தைகளுக்கு கிடக்க வேண்டும் என்பதால்தான் பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை வன்முறைகளில் இருந்தும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதும்தான் தமிழக அரசின் நோக்கம். அனைத்து குழந்தைகளும் பிற குழந்தைகளுடன் அன்பு பாராட்ட வேண்டும். 'நம் நாடு, நம் பெருமை' என்று வரிகளைபோல, 'நம் பள்ளி நம் பெருமை' என்பதும் ஆக வேண்டும். அதுதான் மிக மிக முக்கியம்” என்றார்.
சமீபத்திய செய்தி: இலங்கையில் தொடரும் நெருக்கடி - தவறுகளை ஒப்புக்கொண்ட கோட்டாபய ராஜபக்ச