`எல்லாத்துக்கும் அவசரம் காட்டுகிறார்கள் 2k கிட்ஸ்...’- உண்மையா இந்தக் குற்றச்சாட்டு?

`எல்லாத்துக்கும் அவசரம் காட்டுகிறார்கள் 2k கிட்ஸ்...’- உண்மையா இந்தக் குற்றச்சாட்டு?
`எல்லாத்துக்கும் அவசரம் காட்டுகிறார்கள் 2k கிட்ஸ்...’- உண்மையா இந்தக் குற்றச்சாட்டு?
Published on

கடந்த சில தினங்களாக இளம் சிறார்களின் தற்கொலை செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இதுபற்றிய விவாதங்களும் விரிவுரைகளும் இணையத்தில் ஏராளமாக பகிரப்படுகின்றன. எல்லாமே இன்றைய தலைமுறையினருக்கான அறிவுரைகள்தாம். `பொறுமை வேண்டும்; அவசரப்படாதீங்க; உடனடி தீர்வை நோக்கி செல்லாதீங்க; வாழ்க்கையில் இன்னும் பார்க்கவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு’ என சாமாணியன் தொடங்கி தமிழக முதல்வர் வரை அனைவருமே இந்த தலைமுறை குழந்தைகளுக்கு எக்கச்சக்க அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

இந்நேரத்தில், `பெத்தவங்ககிட்ட அடிவாங்குறது, திட்டுவாங்குறதுக்காகலாமா சாகப்போறது? அப்டிலாம் பார்த்தா நாங்களாம் வாழ்ந்திருக்கவே முடியாது’ என நிறைய மீம்களும் வருகின்றன. ஒரு சில மீம்கள், `அன்று அடிவாங்கியதால்தான் இன்னைக்கு நாங்க நல்லாருக்கோம்’ என்கிற தொனியில் இருக்கிறது. இன்னும் சில, அப்யூசிவ் பேரண்டிங்கை (தங்கள் குழந்தைகளை ஒழுக்கம் சார்ந்து மோசமாக விமர்சிப்பது, சாப்பிடும் குழந்தையை உணவுக்காக குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குவது, கல்வியில் முன்னிலையில் வராத குழந்தைகளை அதற்காக அடிப்பது போன்றவை) ஊக்கப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. இன்னும் சில மீம்கள், `இந்த தலைமுறை பசங்க, ஹேர்-கட் பண்லையானு ஸ்கூல்ல கேட்டாகூட போய் தற்கொலை முடிவுக்கு போயிடறாங்க’ என்றும் வந்தன.

குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் பூங்கொடி பாலா இதுபற்றி நம்மிடையே பேசுகையில் “உண்மையில், இந்த 2k கிட்ஸின் இந்த தற்கொலை முடிவுகளை, நாம் இவ்வளவு எளிதாக புரிந்துக்கொள்ள கூடாது. ஏனெனில், அவர்களை இந்த நிலைக்கு வளர்த்துவிட்டதும் நாம்தான். நம் தலைமுறைகளில் நாம் எதிர்கொண்டதைவிடவும் அதிகமான சோஷியல் எக்ஸ்போஷரை அவர்கள் இன்று எதிர்கொள்கின்றனர். இது காலத்தின் மாற்றம். அதுவும் நாம் கொண்டு வந்த மாற்றம்.

செல்ஃபோன், இண்டர்நெட், வீடியோ கேம்ஸ், மொபைல் கேம்ஸ், எக்ஸ்பாக்ஸ், ப்ளே ஸ்டேஷன் என்று அவர்கள் பார்க்காத வளர்ச்சியே இன்றைக்கு இல்லை. இது எல்லாம், அவர்களை ஏதோ ரேஸில் ஓடவைத்தது போன்ற உணர்வை அவர்களுக்கு டீன்-ஏஜிலேயெ கொடுத்துவிடுகின்றன. நாம் நம்முடைய டீன்- ஏஜ் காலத்தில் இப்படி ஒரு ப்ரஷரை எதிர்கொண்டிருக்க மாட்டோம். ஆகவே இந்த `போன தலைமுறையில நாங்க’ என்ற உருவகமே இங்கு ஒத்துவராது” என்றார் அழுத்தமாக.

மேலும் சில முக்கியமான விஷயங்களை, அவர் நம்முடன் பகிர்ந்துக்கொண்டார். அவற்றின் ஒரு சிறு தொகுப்பு இங்கே:

“முதலில் 90-ஸ்ல நாங்க அப்படி இருந்தோம், 80-ஸ்ல இப்படி இருந்தோம் என்பதை விட்டு நாம வெளியே வரவேண்டும். வந்துவிட்டு, இன்றைய பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் மன அழுத்தங்களையும், பாதுகாப்பின்மையையும் புரிந்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும். ஒரு சராசரி குழந்தையால் ஒரு நாளில் 10 மணி நேரத்துக்கு மேல் முழு கவனத்துடன் படிக்கமுடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதில் கிட்டத்தட்ட 8 மணி நேரம் பள்ளியிலேயே போய்விடும். அதன்பின் வீட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு, ஹோம்-வொர்க்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அதை அவர்கள் முடிக்கவே, நேரம் சரியாக இருக்கும். இவைபோக, அன்று நடத்தப்பட்ட பாடங்களை சும்மா ஒருமுறை ரிவைஸ் பண்ண சொல்லலாம். இதை செய்தால், அவர்களுக்கும் ஓரளவு ரிலாக்ஸ்டாக இருக்கும். ஆனால் நாம் இன்று இதுமட்டுமா செய்கிறோம்?

மேற்கூறியவை போக, பாடம் படிக்க ஒரு ட்யூஷன் - பாட்டு படிக்க ஒரு ட்யூஷன் - ஸ்விம்மிங் க்ளாஸ் - ஆர்ட் க்ளாஸ்.... இதெல்லாம் போக 5-வது, 6-வது படிக்கும் குழந்தைக்கே ஐஐடி, நீட் கோச்சிங் வகைகள்...! இதிலும் சிபிஎஸ்சி குழந்தை என்றால், அவர்களை தமிழக அரசு கல்லூரியில் சேர்க்க தனி கோச்சிங் வைக்கிறோம். அதேபோல தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் பிள்ளைகளை மத்திய அரசு கல்லூரியில் சேர்க்க தனி கோச்சிங் வைக்கிறோம். ஐஐடி, நீட் என்று மட்டுமில்லை... இன்னும் எக்கச்சக்க கோச்சிங் சென்டர்கள் நம் ஊரில் வந்துவிட்டது. குறிப்பிட்ட படிப்பு வரவில்லை என்றால் அதற்கென்று தனி வகுப்புகள் என சிறப்பு வகுப்புகளும் வந்துவிட்டன. இப்படி ஒரு குழந்தையை 5-ம் வகுப்பிலிருந்தே `ஓடு ஓடு’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். முதலில் இந்த கோச்சிங் தரும் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து நம் பிள்ளைகளை நாம் காக்க வேண்டிய தேவை முந்தைய தலைமுறையை விட பன்மடங்காக இப்போது அதிகரித்துள்ளது.

பொதுவாக குழந்தைகளுக்கு ஒரு குணமிருக்கும். தன்னிடம் ஒரு விஷயம் நடக்க, இன்னொரு விஷயத்தை வீட்டில் எதிர்பார்ப்பார்கள். உதாரணத்துக்கு நாமெல்லாம் நம் அம்மா அப்பாவிடம் `நல்லா மார்க் வாங்கினா, எனக்கு அந்த சாப்பாடு செஞ்சுதாங்க - அந்தக் கடைக்கு ஷாப்பிங் கூட்டிட்டு போ’ என்று சொல்லியிருப்போம் தானே?! அப்படி இன்றைய குழந்தைகளும் வீட்டில் கேட்பதுண்டு. இதில் அன்றைய பெற்றோர் செய்த விஷயமொன்றை, இன்றைய பெற்றோர் செய்ய துணிவதில்லை. அன்று நம் பெற்றோர் செய்தது, `இல்லை, முடியாது’ என நம்மை அந்த விஷயத்துக்காக ஏங்க விட்டனர். ஆனால் இந்த தலைமுறை பெற்றோர் குழந்தைகளிடம் `நோ’ சொல்வதே இல்லை. எல்லாவற்றையும் சில தினங்களில் செய்து தந்துவிடுகின்றனர்.

இந்த இடத்தில், பெற்றோர்தான் தங்கள் குழந்தையை கையாள கற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோரால் அது முடியாமல் போகும் சூழலில், குழந்தையை உகந்த மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். கவுன்சிலிங் கொடுத்து, `வாழ்க்கைல எல்லாமே நொடிகள்ல நடக்காது’ என்பதை அவர்களுக்கு புரியவையுங்கள். அதைவிடுத்து, உடனே உடனே என குழந்தைக்காக செய்யும்போது, பின்விளைவுகள் ஏற்படும்தான். ஆகவே பெற்றோர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். `நான் பட்ட கஷ்டத்தை என் குழந்தை படக்கூடாது’ என நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதற்காக `என் குழந்தை கஷ்டத்தை அனுபவிக்கக்கூடாது - எல்லாமே கிடைத்துவிட வேண்டும்’ என்று நினைப்பது எப்படி சரியாகும்?

சாதாரணமாக சைக்கிள் ஓட்ட பழகினாலேயே இரண்டு முறை கீழே விழத்தானே செய்வார்கள்? அப்படியிருக்க வாழ்க்கை எனும் நீண்ட பயணத்துக்கு தயாராகும்போது, சில தடுமாற்றங்கள் வரும்தாம். சைக்கிளில் இருந்து விழும் குழந்தையை, நாம் அடிப்போமா என்ன? இல்லை, நீ தான் தப்பா ஓட்டிட்ட என்று குறைதான் சொல்வோமா? இரண்டு முறை சொல்லிக்கொடுப்போம்; காயத்துக்கு மருந்து போட்டுவிடுவோம்; கவனமின்மைக்காக கொஞ்சம் கடிந்துக்கொள்வோம்; அடுத்த சில முறைகளுக்கு நாமே நேரடியாக சென்று அவர்களை கண்காணிப்போம். அதுதானே? அப்படித்தான் வாழ்க்கை பயணத்துக்கும் அவர்களை நாம் தயார் படுத்த வேண்டும்.

இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் இரண்டு முக்கியமான பிரச்னைகளாக இருப்பவை, `வீட்டில் சொல்ல வேண்டிய விஷயங்களையெல்லாம் பயத்தில் சொல்லாமல் தவிர்ப்பது (பாலியல் துன்புறுத்தல்களின்போது வீட்டில் பேசாதிருப்பது போன்ற சூழல்) - உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது’. இவை இரண்டும் உங்கள் குழந்தைக்கும் இருக்கிறதெனில், அவர்களிடம் அமர்ந்து பேசுங்கள். எப்போதும் அவர்களை தனிமையில் விடாதீர்கள். தற்கொலைக்கு முயலும் குழந்தைகளில், 90% குழந்தைகள் அதன் தீவிரத்தன்மையை யோசித்து செய்வதில்லை. கோபம் வந்தவுடன் எப்படி தன் அறைக் கதவை `டம்’மென்று அடித்துக்கொள்வார்களோ, அபப்டி நினைத்துதான் தற்கொலை முயற்சிகளையும் செய்கிறார்கள். இப்படியானோரிடம் சில நிமிடம் அமர்ந்து பேசி, பெற்றோர் தங்கள் நிலையை புரிய வைத்தாலே பல பிரச்னைகளை தவிர்க்க முடியும். ஆனால் நாம் அதற்கு தயாரே இல்லை.

குழந்தைகளின் இந்த பொறுமையின்மைக்கு யூ-ட்யூப், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்கள் கூடுதல் உதவியாக இருக்கிறது. முதலில் நம் குழந்தைகளை, மனிதர்களுக்கு பழக்கப்படுத்துவோம். அவர்களை பேசவிட்டு கேட்போம். மின்னணு சாதனங்களற்ற வாழ்க்கையை குழந்தைகளுக்கு கொடுப்பது சாத்தியமின்மையாக இருக்கலாம்... ஆனால் அதை கட்டுப்படுத்த முடியும். அதற்கு பெற்றோர் அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். படிப்பை தாண்டி, உடலுழைப்பு சார்ந்த விளையாட்டுக்கு குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும், அனுமதிக்க வேண்டும்.

குழந்தையோடு அமர்ந்து தினமும் பேசவேண்டும். பேசவேண்டும் என்பதை விட முக்கியம், அவர்களை பேச விட்டு கேட்க வேண்டும். உங்களுக்கு பிடிக்காத, அல்லது தெரியாத விஷயத்தை குழந்தை சொன்னால்கூட அரை மணி நேரமாவது அமைதியாக அவர்களுக்கு செவிகொடுங்கள். அந்தப் பழக்கம் நாள்படுகையில், குழந்தைகள் பெற்றோரிடம் பாதுகாப்பாக உணர்ந்து, தங்களின் மனப்பிரச்னைகளை தைரியமாக பகிர்வார்கள்.

முதலிடம் இல்லையென்றால் பரிசு தட்டிப்போக, வாழ்க்கை ஒன்றும் ஓட்டப்பந்தயம் இல்லை. உங்க குழந்தைக்கு என்ன விருப்பமோ, அதை அவர்கள் செய்யட்டும். நெருக்கடியில்லாமல், கொஞ்சம் மூச்சுவிட்டபடி. Let them breathe peacefully first”

ஆம், அவர்களை கொஞ்சம் மூச்சுவிட விடுங்கள், வளர்ந்தவர்களே. நீங்கள் அடிவாங்கிய, அவமானப்பட்ட கதைகளை கேட்க அவர்கள் இங்கு இல்லை. அவர்கள் கதைகளை சொல்லவும்தான் இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com