கல்வி டிவிக்கு குவியும் பார்வையாளர்கள்... அமெரிக்கா, அரபு நாடுகளிலும் வரவேற்பு

கல்வி டிவிக்கு குவியும் பார்வையாளர்கள்... அமெரிக்கா, அரபு நாடுகளிலும் வரவேற்பு
கல்வி டிவிக்கு குவியும் பார்வையாளர்கள்... அமெரிக்கா, அரபு நாடுகளிலும் வரவேற்பு
Published on

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. ஊரடங்கு நாட்களில் வீட்டில் முடங்கிய பள்ளி மாணவர்களுக்கு இந்த டிவி மூலம் வீடியோ பாடங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதற்கு தமிழகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

சில வாரங்களில் மட்டும் கல்வி டிவியின் பள்ளிப் பாடங்களை பத்து லட்சம் பேர் பார்த்துள்ளனர். குறிப்பாக பத்தாம் வகுப்பு பாடங்களை அதிக அளவில் மாணவர்கள் கவனித்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பயன்படும் சைகை மொழி காணொலிகளையும் கவனித்துள்ளனர்.

ஒவ்வொரு பாடமும் 30 நிமிடங்கள் ஓடக்கூடியவை. "கல்வி டிவியின் பார்வையாளர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் பலர் கவனித்துள்ளனர்" என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கல்வி தொலைக்காட்சியின் சிறப்பு அதிகாரி பி.ஏ. நரேஷ் தெரிவித்துள்ளார்.

கல்வி டிவியில் ஒளிபரப்பாகும் பாடங்கள், அதே நாளில் யூடியூப் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. காணொலி பாடங்களை உருவாக்கும் பணியில் 8,500க்கும் அதிகமான ஆசிரியர்களும், பேராசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். பாடநூல்களில் உள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் அவர்கள் காணொலி பாடங்களை உருவாக்குகிறார்கள். அவை முழுமையாக தயாரிக்கப்பட்டதும் பாடரீதியான நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட பின்னரே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.

கல்வி டிவியில் பாடங்கள் மட்டுமன்றி, இசை, நடனம், கவின்கலை குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கும் வல்லுனர்கள் மூலம் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சியும் ஞாயிறன்று ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், தினமும் 6 மணி நேரம் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடங்களும் ஆகஸ்ட் வரையில் நடத்தப்படவுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com