எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவ மேற்படிப்புக்கான ‘இனிசெட்’ நுழைவுத்தேர்வை ஒருமாதம் ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எய்ம்ஸ், ஜிப்மர், பிக்மெர் மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பில் சேர இனிசெட் (INI CET) நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வுகள் வரும் ஜூன் 16ஆம் தேதி நடக்கவிருந்தது. இந்நிலையில் இந்த தேர்வுகளை தள்ளிவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜூன் 16இல் நடக்கவிருந்த இனிசெட் நுழைவுத்தேர்வை ஒருமாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
மேலும், கொரோனா காரணமாக மருத்துவர்கள் கடுமையான பணிச்சூழலில், மன உளைச்சலில் இருப்பதால் தேர்வுகள் குறைந்தபட்சம் ஒருமாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஒருமாதத்திற்கு பிறகு தேர்வு தேதிகுறித்து தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, ‘இனிசெட்’ தேர்வு ஒத்திவைப்பைத் தொடர்ந்து நீட் தேர்வுகுறித்தும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.