அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய கடற்படையில் 400 காலிபணியிடங்களுக்கான (40 பெண்கள்) வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அக்னிவீர் என்ற பெயரில், இதுதொடர்பான அறிவிப்புகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இப்பணியில் சேர ஆர்வமுள்ள திருமணமாகாத ஆண், பெண் joinindiannavy.gov.in என்ற இணையதளம் வழியாக இதற்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 25ம் தேதி தொடங்கிய இதற்கான விண்ணப்ப படிவங்கள், ஜூலை 30ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் டிசம்பர் 1, 1999 முதல் மே 31, 2005 - காலகட்டத்துக்குள் பிறந்தவர்களாக இருக்கவேண்டும். கல்வித்தகுதியாக, மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது (10-ம் வகுப்பு தேர்ச்சி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Matric Recruit என்ற பதவிக்காக எடுக்கப்படும் இந்தப் பணிக்கு, சுமார் 30,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2-ம் ஆண்டில் சம்பளம் ரூ.33,000 என்றும், 3-ம் ஆண்டில் ரூ.36,500 என்றும், 4-ம் ஆண்டில் ரூ.40,000 என்றும் உயர்த்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தேர்வு வழிமுறை மேற்கொள்ளப்படப்பட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, பின் எழுத்துத்தேர்வும் உடற்தகுதித்தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இவையன்றி, விண்ணப்பிக்கும் நபர் திருமணமாகாத நபராக இருக்க வேண்டும் என்பது விதி.
இந்திய கடற்படை அக்னிவீர் MR பதவிகளுக்கு விண்ணப்பிக்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்:
இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.joinindiannavy.gov.in பக்கத்துக்கு செல்லவும்
Register என்பதை க்ளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
அடுத்தபடியாக ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவேற்றவும். அனைத்தையும் பதிவேற்றிய பின், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் கடைசி தேதிக்கு முன்னரே திருத்தம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். தகவலில் ஏதேனும் தவறு இருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் என்பதால் கவனத்தோடு இருக்கவும். தேவைப்பட்டால் விண்ணப்பப்படிவத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
நவம்பர் 2022-ல் எழுத்துத் தேர்வுக்குப் பிறகு தகுதிப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாவோருக்கு டிசம்பர் 2022-ல், பயிற்சி தொடங்கும் என தெரிகிறது.