துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டதா?-முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் பதில் என்ன?

துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டதா?-முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் பதில் என்ன?
துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்கப்பட்டதா?-முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் பதில் என்ன?
Published on

தமிழகத்தில் துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது என்றும்,  முன்னாள் ஆளுநர் பன்வரிலால் புரோகித் கூறியதுபோல், தமிழகத்தில் எந்த நிகழ்வும் இல்லை என்றும் முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் துணை வேந்தர் நியமனம் 40 கோடி முதல் 50 கோடி வரை விற்கப்பட்டது என சண்டிகரில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பன்வரிலால் புரோகித் தெரிவித்தார். இதையடுத்து, கடந்த ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், “தமிழக முன்னாள் ஆளுநர் பன்வரிலால் புரோகித் கூறியதுபோல், தமிழகத்தில் எந்த நிகழ்வும் இல்லை. அவர் தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது, துணை வேந்தர் நியமனத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வாங்குகிறார்கள் என இதேப்போன்று ஒரு விழாவில், பேசினார். நான் அப்போதே இவரது கருத்துக்கு, மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளேன். ஒரு துணை வேந்தரை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானவுடன், தேடுதல் குழு அமைக்கப்படுகிறது.

அந்தக் குழு 10 பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்புகிறது. இந்த 10 பேரில் மூன்று பேரை தேர்வு செய்து அந்த மூன்று பேரிடமும் ஆளுநர் நேர்காணல் நடத்துகிறார். இந்த நேர்காணலில் அரசுக்கு, அரசு சார்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு, உயர் கல்வித்துறைக்கு எந்த தொடர்பும் இல்லை. இதில் அரசுக்கோ, முதல்வர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சருக்கோ தொடர்பு இல்லை. இந்நிலையில் தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு 40 கோடி முதல் 50 கோடி வரை விற்கப்படுகிறது என்று பன்வாரிலால் புரோகித் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

தற்போது பஞ்சாப் மாநிலத்தில் துணை வேந்தர்களை நியமிக்கின்ற வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை என்பதால் தமிழகத்தின் மீது குறை கூறுவது ஏற்புடையதல்ல. துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது. அதில் எந்தவித தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழு பொறுப்பு ஆளுநரே. இதில் ஆளுகின்ற அரசுக்கோ, முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சருக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. இந்த நியமனத்தில் முதல்வருக்கோ, அரசுக்கோ எந்த தொடர்பும் இல்லை. முழுக்க முழுக்க ஆளுநரையைச் சார்ந்தது. ஒருவேளை அவ்வாறு பணம் கை மாறி இருந்தால் அது ஆளுநரையே சாரும்.

மேலும் 22 துணை வேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்தேன் என்று அவர் சொல்கிறார். இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அரசு தலையிட்டு பட்டியல் கொடுத்து இருந்தால் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். அவர் கூறுவது தவறான தகவல் தான்” என முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com