பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெற்று நடைபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது தேர்வு செய்யப்பட்ட 2000 நபர்களில் 199 நபர்களின் போட்டித் தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டிருந்தது. இது தொடர்பாக விடைத்தாளை திருத்திய தனியார் நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தப் போட்டித்தேர்வை தமிழக அரசு ரத்து செய்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.