எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ (EMBA) பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை சென்னை ஐஐடி ஆன்லைன் வழியாக விநியோகிக்க தொடங்கியுள்ளது. இப்படிப்பு, பணியில் இருக்கும்போதே படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு பட்டப்படிப்பான இதில், சென்னை ஐஐடியின் மேலாண்மை படிப்புகள் துறை, நேரடி வரத்தக பிரச்சினைகளுக்கான 3 திட்டங்கள் உட்பட கடுமையான பயிற்சி சார்ந்த பாடத்திட்டங்கள் ஆகியவை வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இ.எம்.பி.ஏ படிப்பின் பாடத்திட்டத்தில் டிஜிட்டல் பொருளாதாரம், உலகளாவிய யுக்தி மற்றும் தொழில் துறை 4.0 தொழில்நுட்பங்கள் ஆகியவையாவும் தொழில் தேவைகளுடன் இருக்குமென அந்நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் வழக்கமான பாடங்கள், தற்போதைய வணிகத்துக்கு முக்கியமான சமூக ஊடகம் மற்றும் இன்டர்நெட் மார்க்கெட்டிங், பல தளங்களின் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய வர்த்தக மேலாண்மை, நவீன உற்பத்தி செயல்முறைகள் மற்றும் 3 டி பிரிண்டிங் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றை கற்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டு தருமென சொல்லப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் உட்பட இதர முக்கியமான பாடங்களும் இதில் அடங்கியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் (20.9.2021) கிடைக்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி 19.10.2021. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://doms.iitm.ac.in/emba/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இஎம்பிஏ பட்டப்படிப்பு குறித்து சென்னை ஐஐடியின் மேலாண்மை படிப்புகள் துறை பேராசிரியர் ஜி அருண் குமார் கூறுகையில், ‘‘ இஎம்பிஏ படிப்பின் அந்தஸ்து, தொழில்துறையின் பெரும் ஆதரவுடன் வளர்ந்து வருகிறது. இந்த படிப்பில் சேரும் எங்கள் மாணவர்களின் சராசரி அனுபவம் 11 ஆண்டுகளுக்கும் மேலானது மற்றும் அவர்கள் பொது மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்தவர்கள். இந்தப் படிப்பு, ஐம்பது ஆண்டு கால அதிநவீன ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் பாரம்பரியத்தை மேம்படுத்துகிறது. மற்றும் மாணவர்கள், கற்கும் விஷயங்களை தங்கள் வேலையில் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் இது அனுபவமிக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என்றுள்ளார்.
இந்த படிப்பு வார இறுதி நாட்களில் நேரடியாகவும், காணொலி முறையிலும் படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்று வார இறுதி நாட்களில் நடைபெறும் வகுப்புகள் ஜனவரி 2022 இல் தொடங்குமென கூறப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேருவதற்கு, ஏதாவது இளநிலை பட்டப்பிடிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், குறைந்தது 3 ஆண்டுகள் தொழில் துறை அனுபவம் இருக்க வேண்டும். இதற்கான தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் காணொலி மூலமான நேர்காணல் முறையில் நடைபெறவுள்ளது.