நாட்டின் புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் (ஐஐடி) இயக்குநர்கள், தற்போது நீட், ஜேஇஇ தேர்வுகளை தாமதிக்காமல் நடத்தவேண்டும் என்றும், அப்படி தாமதித்தால் ஒன்றுமில்லாத கல்வியாண்டாக மாறிவிடும் என்றும் எச்சரித்துள்ளனர். மேலும், தேர்வுக்கு மாற்றாக வேறு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் சேர்வதற்கான ஜேஇஇ தேர்வுகளும் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டன. இந்த தேர்வுகளை அடுத்த மாதம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனாவின் பரவல் அதிகம் உள்ளதால் தேர்வுகளை தள்ளிவைக்கவேண்டும் என தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஐஐடி இயக்குநர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
"ஏற்கெனவே கொரோனா காரணமாக மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கல்விப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா முடிவுக்கு வருவதுபோல தெரியவில்லை. மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, இந்த கல்வியாண்டை ஒன்றுமில்லாத ஆண்டாக மாற்றிவிடக்கூடாது" என்று தெரிவித்துள்ளார் ஐஐடி ரூர்கேலா இயக்குநர் அஜித் கே. சதுவர்வேதி.
ஐஐடி காரக்பூர் இயக்குநர் வீரேந்திர திவாரி, "உலகளவில் முக்கியத்துவம் பெற தேர்வுகள் உதவுகின்றன. இந்த நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் மிகவும் சவால் நிறைந்தவையாக இருக்கின்றன. இந்தத் தேர்வுகளுக்கு மாறாக எடுக்கப்படும் எந்த முடிவும் இதற்கு இணையானதாக இருக்காது " என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்துவது என்பது ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவல்ல. பலராலும் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டது. பாதுகாப்புடன் மாணவர்கள் தேர்வுகளை எழுதுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளதாக ஐஐடி ரோப்பார் இயக்குநரும் ஐஐடிகளில் மாணவர் சேர்க்கை உறுப்பினருமான சரித்குமார் தாஸ் கூறியுள்ளார்.