பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டில் பணிபெற மதம் மாறியிருந்தால் வேலை நீக்கம் செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கவுதமன் என்ற பணிக்கு தகுதியில்லாதவரை நூலக அதிகாரியாக நியமித்ததுடன் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து, பதவி உயர்வை ரத்து செய்யக்கோரி 3 பேர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உரிய கல்வித்தகுதியை ஆராயாமல், முறையான விசாரணை செய்யாமல் பல்கலைக்கழகம் பணி நியமனம் வழங்கியது தவறு என்றும், மேலும் பணி உயர்வு வழங்கியது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார். மேலும், அவருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்யவும், அவருக்கு பாதி ஊதியத்துக்கான ஓய்வூதியத்தை மட்டுமே வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பணி நியமனம் செய்யும்போது வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் எனவும், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற மதம் மாறியது தெரியவந்தால் பணிநீக்கம் செய்யலாம் என்றும், பணிநீக்கம் செய்து ஊதியத்தை திரும்ப வசூலிக்கவேண்டும் எனவும் பல்கலைக்கழகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நேர்முகத்தேர்வை முழுமையாக பதிவு செய்யவேண்டும் எனவும், பணியாளர் தகுதிகுறித்த ஆய்வு விசாரணையை 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்ற காலக்கெடுவையும் நீதிபதி விதித்துள்ளார்.