மாணவர்களுக்கு மிதிவண்டியை விலையில்லாமல் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகில்லை என்று உச்சநீதிமன்றமோ, ஒன்றிய அரசோ சொன்னால் அதற்கு மேல் ஒரு தவறான கருத்து ஜனநாயகத்தில் இருக்க முடியாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பி. தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், அரசு வழங்கும் இலவச திட்டங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து கேள்வி கேக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, சமுதாயம் நீதியோடு இருக்க, அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பது தான். பிறப்பால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட கூடாது, உழைப்பு மற்றும் கல்வி அடிப்படையில் அனைத்து மக்களும் முன்னேற முழு வாய்ப்பு அளிக்க வேண்டும், இதை தத்துவம் என்று கூட சொல்லலாம். அதில் முக்கிய பங்கு பெண்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமை கல்வியிலும், சொத்திலும், பொருளாதாரத்திலும் கிடைத்திட வேண்டும்.
மேலும் விலையில்லா பொருட்கள் வழங்குவதை உச்ச நீதிமன்றமும், ஒன்றிய அரசும் இதெல்லாம் தவறு என்றும் செய்யக்கூடாது என்றும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு மிதிவண்டியை விலையில்லாமல் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகில்லை என்று உச்சநீதிமன்றமோ, ஒன்றிய அரசோ சொன்னால் அதற்கு மேல் ஒரு தவறான கருத்து ஜனநாயகத்தில் இருக்க முடியாது.
சமூக நீதிக்காக கல்வி முக்கியம், குறிப்பாக பெண்கள் கல்வி முக்கியம். அதற்கு எந்த வழியில் எல்லாம் ஊக்கம் கொடுக்கலாம் என்று திட்டமிட்டு அறிவோடு நிதியை ஒதுக்கி செயல்படுத்தக்கூடிய அரசு இது. இதெல்லாம் இலவசம் என்றும் தவறு என்றும் கூறினால் அதை விட சமுதாய துரோகம் இருப்பதாக என்னால் சிந்திக்க முடியவில்லை.
தொகுதியில் இன்னும் பல பள்ளிகளுக்கு சைக்கிள் வரவில்லை. அதனை உடனடியாக வழங்குவதற்கு சென்னையில் துறை ரீதியாக ஆய்வு செய்து விரைவில் நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார். மேலும் இல்லம் தேடி கல்வி, மிக முக்கியமான திட்டம் அதிலும் பலவகையில் ஈடுபட்டு உள்ளவன் என்ற அடிப்படையில், நம் மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது என்பது மிக்க மனநிறைவு அளிக்கிறது.
இல்லம் தேடிக்கல்வி திட்டத்தை தேவையான நாள் வரை நீடிப்போம், எத்தனை நாள் வரை அது தேவையோ அதுவரை, எவ்வளவு நிதி வேண்டுமானாலும் சரி ஒதுக்கீடு செய்து அதனை நீடிப்போம் என்று தெரிவித்தார்.