2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு (GER) 50%-ஆக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது மத்திய அரசு. ஆனால், கடந்த ஆண்டிலேயே தமிழ்நாடு 50% இலக்கை அடைந்திருப்பது பெருமிதத்துக்குரியது. தமிழ்நாட்டின் கல்வித்தரம் இந்தியாவிலேயே மிகவும் சிறப்பானது. தொடர்ந்து கல்வி வளர்ச்சியின் மீது எடுக்கப்பட்டு வரும் முயற்சியின் காரணமாக தற்போது இந்திய அளவில் கல்வியில் தமிழ்நாடு தனிப் பெருமையை அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
சமீபத்தில், 2019-2020-ம் ஆண்டுக்கான உயர்கல்வி தொடர்பான அகில இந்திய கணக்கெடுப்பில், நாடு முழுவதும் சராசரியாக 27.1% மாணவர்கள் உயர்கல்விக்குச் சென்றிருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. GER (Gross Enrollment Ratio) - உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு. அதாவது பள்ளி முடித்து கல்லூரி படிப்புகளில் சேர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்கீடு செய்வது. இந்த அளவீட்டில் தமிழ்நாட்டின் GER, ஒட்டுமொத்த இந்தியாவின் GER அளவை விடக் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால், 2019-2020-ல் தமிழ்நாட்டின் GER 51.4%. அதாவது, 2019-2020-ல் 18-23 வயதுள்ள இளைஞர்கள் 35.2 லட்சம் பேர் உயர் கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள்.
2019-20-ல் GER உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு பட்டியலில் 51.4 சதவிகிதத்துடன் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 75.8 சதவிகிதத்துடன் சிக்கிம் முதல் இடத்திலும், 52.1 சதவிகிதத்துடன் சண்டிகர் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது, நாட்டின் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில், 2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் GER 50%-ஆக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆனால், 2021-லேயே தமிழ்நாடு 50% இலக்கை அடைந்திருப்பது தமிழ்நாட்டிற்குப் பெருமிதம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2019-20-ம் ஆண்டின் கணக்கின்படி, மொத்தம் 2,610 கல்லூரிகள் உள்ளன. 35.2 லட்சம் பேர் உயர்கல்விக்குச் சென்றுள்ளனர்.
இதில், ஆராய்ச்சி படிப்பான பி.எச்.டி. பட்டம் பெறுவதற்கான மாணவர் பதிவும் தற்போதைய ஆண்டில் அதிகரித்திருக்கிறது. 2018-2019-ம் கல்வி ஆண்டில், 25,820 மாணவர்கள் பி.எச்.டி. பட்டம் பெறப் பதிவு செய்துள்ள நிலையில், 2019-2020-ம் கல்வி ஆண்டில் 15,828 ஆண்களும், 14,832 பெண்களும் என்று 30,660 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்திய அளவில் எடுத்துக் கொண்டால், கடந்த 2018-19-ம் ஆண்டு 3.74 கோடியாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை, 2019-20-ம் ஆண்டில் 3.85 கோடியாக அதிகரித்துள்ளது. பாலின சமநிலை குறியீட்டின்படி உயர் கல்வித்துறையை அணுகுவதில் ஆண்களை விடப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருக்கின்றனர். இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் 3.38 கோடி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதம் 85 சதவீதத்தினர் மனித வளம், அறிவியல், வணிகவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவ அறிவியல். தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சார்ந்த படிப்புகளில் இணைந்துள்ளனர்.
இந்திய அளவில் பாலின சமநிலை குறியீட்டின்படி உயர் கல்வித்துறையை அணுகுவதில் ஆண்களை விடப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருக்கின்றனர். 2018-19-ம் ஆண்டு 1.00 ஆக இருந்த இந்தக் குறியீடு, 2019-20-ம் ஆண்டில் 1.01 ஆக அதிகரித்தது. தமிழகத்திலும், 0.97 இருந்த இந்தக் குறியீடு 0.99 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "மத்திய அரசு, 2035-ம் ஆண்டுக்குள் GER-ல் 50% இலக்கை நிர்ணயித்தால், தமிழக அரசு 2035-க்குள் 100 சதவிகிதத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். அதற்கான கொள்கையை வகுத்து, அரசு கல்லூரிகளை வலுப்படுத்தி புதிய கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் இருக்க அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகையான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு சுயமாக திட்டமிட்டு 100 சதவிகிதத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். அரசு கல்லூரிகள் பாதிக்கப்பட்டால் மட்டுமே மாணவர்கள் பாதிப்படைவார்கள். தனியார் கல்லூரிகள் பாதிக்கப்பட்டால் மாணவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே, அரசு கல்லூரிகள் அதிகம் திறக்கப்பட வேண்டும். தற்போதுள்ள அரசு கல்லூரிகளையும் வலுப்படுத்த வேண்டும்.
வேலைவாய்ப்பின்மையைப் போக்க உற்பத்தி தொழிற்சாலைகளை திறக்க வேண்டும். அதிக வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும்" என்கிறார் அவர்.
கல்வியாளர்கள் கூறும் பொதுவான கருத்துக்கள் என்னவென்றால், உயர் கல்வியின் கல்வித்தரம் இன்னும் அதிகமாக உயர்த்தப்படவேண்டும். காரணம், தற்போதைய சூழ்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து முடித்து வெளியில் வரும்போது, வேலையின்மை விகிதம் அதிகரிக்கிறது. 2021- மே மாதக் கணக்கின்படி, தமிழகத்தின் வேலையின்மை விகிதம் 28.0 சதவிகிதமாக உள்ளது. வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் அரசு முனைப்புக் காட்டுவதோடு, தனியார் பங்களிப்பையும் ஊக்கப்படுத்த, அவர்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகள், மானியங்கள் வழங்கவேண்டும் எனக் கூறுகின்றனர்.
தொடர்ந்து கல்வி வளர்ச்சியில் உயர்ந்து கொண்டே இருக்கும் தமிழ்நாடு, உலக அளவிலும் கல்வியில் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தியாவும் தமிழ்நாடும் - ஒரு ஃப்ளாஷ்பேக் பார்வை:
கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று பாரதியார் கூறிய காலகட்டத்தில், தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 20% பேருக்கும் குறைவாகவே இருந்தனர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் 700-க்கும் அதிகமான பாடசாலைகள் இருந்ததாக 1797-ம் ஆண்டின் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவன குறிப்பேட்டின் மூலம் தெரிந்துகொள்ளலாம். 1813-ம் ஆண்டுகளில், பிரிட்டிஷ் அரசு கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகள் மூலமாக கல்வியை வழங்கியது.
1834-ல் மெக்காலே இந்தியாவிற்கு வந்த பிறகு, இந்திய பாரம்பரிய கல்வி முறையை மாற்றி, அனைவருக்கும் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்டார். ஆங்கில புத்தகங்களைப் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப் பரிந்துரை செய்ததால், 1835-ம் ஆண்டு இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபு மெக்காலேவின் பரிந்துரைகளை ஏற்றார். இதையடுத்து மெக்காலே கல்விக்குழு உருவாக்கப்பட்டது.
1853-ல் சார்லஸ் உட் தலைமையில், ஆரம்பக் கல்வியை மாநில மொழிகளிலும், இடைநிலை மற்றும் உயர் கல்வியை ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளிலும், பட்டப்படிப்புகளை ஆங்கில மொழியிலும் வழங்க வழி செய்தார். அதேநேரத்தில் இந்தியாவில் பலகலைக்கழகங்கள் தொடங்கவும் ஏற்பாடுகள் செய்தார். 1882-ல் வில்லியம் ஹன்டர் தலைமையில், இந்தியாவின் ஆரம்பக் கல்வியின் தரத்தினை ஆராய்வதற்காகக் குழு அமைக்கப்பட்டது. இதன்மூலம் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு மற்றும் மாதத்தேர்வுகள் அறிமுகமாயின.
1935-ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, கல்வியானது மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1937-ம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்த மாகாணங்களின் அமைச்சர்கள் ஒன்று கூடி, வார்தாவில் கல்வி மாநாடு ஒன்றை நடத்தினர். இதில், 6 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு இலவசமாகக் கட்டாயக் கல்வி, தொடக்கக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும் போன்ற சில கல்விக் கொள்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 14 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே கல்வியறிவு பெற்றிருந்ததால், அப்போது பிரதமராக இருந்த நேரு, கல்விக்கென சில குழுக்களை உருவாக்கினார். அதில் முக்கியமாக 1952-ம் ஆண்டு, லட்சுமணசாமி முதலியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், பெண்களுக்கான தனி பள்ளிகளை அங்கீகரித்தல், முழுமையாக அந்தந்த பிராந்திய மொழிக் கல்வியை வளர்த்தெடுத்தல் போன்றவற்றைப் பரிந்துரைத்தனர். இந்தக் குழுவில் டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்தி ஆட்சியில், சர்வதேச தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு வழங்க 'நவோதயா பள்ளிகள்' திறக்கப்பட்டன. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, 6 முதல் 14 வயது சிறுவர்கள் அனைவருக்கும், கட்டாய இலவசக் கல்வி வழங்கவும், 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கவும், கல்வி இயக்கத்தினை (SARVA SHIKSHA ABHIYAN) செயல்படுத்தினார்.
1964-ல் கோத்தாரிக் கல்விக்குழு அமைக்கப்பட்டு, 1966 முதல் 10, 11, 12-ம் வகுப்பு கல்வி முறை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், 1965-ல் மும்மொழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1976-ல் மாநில பட்டியலிலிருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக 1970-ல் தமிழ்நாடு பாடநூல் கழகம் உருவாக்கப்பட்டது. 1992-ல் கரும்பலகைத் திட்டம் அறிமுகமானது. 2006-ல் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி அமைச்சகம் தொடங்கப்பட்டது. 2010-11-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 7 முதல் 9-ம் வகுப்புகளுக்கு சமச்சீர்க் கல்வி அறிமுகமானது.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து முதல்வராக இருந்த அனைவருமே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். காமராஜர் கிராமங்கள் எல்லாம் பள்ளிக்கூடங்களைத் திறக்கச்செய்தார். அவரைத் தொடர்ந்து அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, தற்போது மு.க.ஸ்டாலின் என அனைவரின் பார்வையுமே கல்வி வளர்ச்சியின் மீது இருந்திருக்கின்றன.