தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யூகேஜி., வகுப்புகளை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தனியார் பள்ளிகளைப்போலவே அங்கன்வாடி மையங்களிலும் எல்கேஜி., யூகேஜி ஆகிய வகுப்புகள் எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்குவது குறித்த சாத்தியகூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த இரண்டு முடிவுகளைவும் உறுதிப்படுத்தும் வகையில், அரசு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி., யூகேஜி., வகுப்புகளை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி 32 மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில், ஆண்டுதோறும் 52 ஆயிரத்து 933 குழந்தைகள் கல்வி பயில வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் 7 கோடியே 73 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எல்.கே.ஜி., யூ.கே.ஜி. பயிலும் குழந்தைகளுக்கு 4 ஜோடி சீருடைகள், ஒரு ஜோடி காலணி, ஸ்வெட்டர், ரெயின்பூட்ஸ், வண்ண பென்சில்கள், மெழுகு பென்சில்கள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. மேலும் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை எடுக்கவுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.