தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை ஒப்பிட்டு, அதனை உணர்ந்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட விழாவில் பேசியபோது அமைச்சர் கணேசன், “ தமிழக முதலமைச்சர் கல்வித்துறைக்கு 23 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நாட்டின் முன்னேற்றம் ஒரு ஆசிரியர் கையில்தான் உள்ளது. கடந்த 2 ஆண்டு காலமாக மாணவ, மாணவிகள் வீட்டில் செல்போன் வைத்துக்கொண்டுதான் ஆன்லைன் வகுப்பு படிக்கிறார்கள். செல்போனில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஆனால் மாணவர்களை நல்லொழுக்கம் படுத்துவது ஒரு ஆசிரியர் கையில்தான் உள்ளது.
அரசு பள்ளிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது தலைமையாசிரியர் கையில் மட்டுமல்ல அந்தப் பள்ளியில் வேலை செய்யும் ஒவ்வொரு ஆசிரியர்களின் பொறுப்பு. அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வந்த நிலையில் தற்போது உள்ள கல்வித்துறை அமைச்சர் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி உள்ளார். அது இந்த ஆட்சியில் தான் நடந்துள்ளது.
ஒரு எலிமெண்டரி அரசு பள்ளி ஆசிரியருக்கு ஒன்றேகால் லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஏழு அல்லது எட்டாயிரம் மட்டுமே சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், அங்கு படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கு செல்கிறார்கள். இதையெல்லாம் அரசு பள்ளி ஆசிரியர்கள் புரிந்து கொண்டு தேர்ச்சி விகிதத்தை உயர்த்த பாடுபட வேண்டும்.
அண்ணா கூறுவார், சாலையோரத்தில் வேலை அற்றவர்கள் மனதில் விபரீத முடிவுகள் உருவாகும் என்று, அப்படித்தான் வேலையற்ற படித்த மாணவர்கள் ரயிலில் ஓட்டை போட்டு திருட்டில் ஈடுபடுகிறார்கள். நல்லொழுக்கத்தை ஆசிரியர்கள்தான் கற்றுக் கொடுக்க வேண்டும். படித்த மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகாக 200 கோடி ரூபாய் இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது” எனக் கூறினார்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், வேல்முருகன், ராதாகிருஷ்ணன், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.