“எங்க அப்பா, தாத்தா படிக்காதவங்க இப்போ என் பொண்ணு டாக்டரு” - முதல்வரிடம் தந்தை நெகிழ்ச்சி!

“எங்க அப்பா, தாத்தா படிக்காதவங்க இப்போ என் பொண்ணு டாக்டரு” - முதல்வரிடம் தந்தை நெகிழ்ச்சி!
“எங்க அப்பா, தாத்தா படிக்காதவங்க இப்போ என் பொண்ணு டாக்டரு” - முதல்வரிடம் தந்தை நெகிழ்ச்சி!
Published on

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 405 பேர், 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மூலம் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகினர். இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வில் முதல் 18 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கினார். 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள், அரசு பள்ளி மாணவர்களுக்கு நன்னாள்” என தெரிவித்தார். 

“நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம். தொடர்ந்து சட்ட போராட்டமும் மேற்கொண்டு வருகிறோம். பல தடைகளை தாண்டி இந்த சட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றியுள்ளோம்" எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொண்டார்.

இதையடுத்து முதலமைச்சர் பழனிசாமிக்கு கண்ணீருடன் நன்றி சொன்ன மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்தது…

“அரசின் நீட் பயிற்சி மையத்தில் படித்தேன். 7.5 இட ஒதுக்கீடு மூலம் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. இட ஒதுக்கீடு கொண்டுவந்த முதல்வருக்கு நன்றி” என பலரும் சொல்லியிருந்தனர். 

அதில் ஒரு மாணவியின் தந்தை “என் மகள் பிறந்த நாளிலிருந்து அவளை டாக்டராக்கி பார்க்கணும்னு விரும்பினேன். ஆனாலும் குடும்ப சூழல் காரணமா அரசு பள்ளியில தான் அவளை படிக்க வெச்சேன். ஒவ்வொரு நாளும் என் மகள எப்படி மருத்துவராக்க போறேன்னு நினைச்சு இருக்கிறேன். முதல்வர் ஐயா அரசு பள்ளி  மாணவர்களுக்காக ஒதுக்கிய 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மூலம் என் மகளுக்கு மருத்துவ இடம் கிடைச்சிருக்கு. எங்க அப்பா, தாத்தா படிக்காதவங்க இப்போ என் பொண்ணு டாக்டரு. இதை செய்த முதல்வருக்கு நன்றி” என  சொல்லி முதல்வரின் கால்களை கண்ணீர்  மல்க தொட்டு வணங்கினார். அதேபோல் அந்த மாணவியும் முதல்வர் காலில் விழுந்து வணங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com