10 நிமிஷ இடைவேளை; 3000 பேருக்கு 30 கழிவறைதான் -கருத்து கேட்பு கூட்டத்தில் பொங்கிய மாணவிகள்

10 நிமிஷ இடைவேளை; 3000 பேருக்கு 30 கழிவறைதான் -கருத்து கேட்பு கூட்டத்தில் பொங்கிய மாணவிகள்
10 நிமிஷ இடைவேளை; 3000 பேருக்கு 30 கழிவறைதான் -கருத்து கேட்பு கூட்டத்தில் பொங்கிய மாணவிகள்
Published on

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாநில கல்விக் கொள்கை குறித்து நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் மாணவிகள் ஆவேசமாக தங்களது கருத்துகளை முன்வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கல்விக்கொள்கை குறித்து மண்டல அளவிலான கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்குபெற்ற மாணவிகள், தங்களுடைய கருத்துக்களை கூறும்பொழுது மிகவும் ஆவேசப்பட்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

3000 பேர் படிக்கக்கூடிய பள்ளியில் 30 கழிவறைகள்தான் உள்ளது. பத்து நிமிடம் மட்டும்தான் இடைவேளை கொடுக்கப்படுகிறது. நாங்கள் எவ்வாறு ஒரே நேரத்தில் இடைவேளை முடித்து பள்ளி வகுப்புக்கு திரும்ப முடியும்? என மாணவிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.

மேலும், தங்களுக்கு பேருந்து வசதி சரியாக இல்லை; நாங்கள் ஆறு கிலோமீட்டர் நடந்து வருகிறோம். ஆனால் பள்ளிக்கு தாமதமாகச் சென்றால் ஆசிரியர்கள் உங்கள் ஊரில் மட்டும் பேருந்து இல்லையா என்று கேட்கிறார்கள் என மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர். நாள்தோறும் கழிவறையை சுத்தம்செய்ய தூய்மைப் பணியாளர்கள் வேண்டுமென்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

சத்துணவு தரமானதாக வழங்கப்பட வேண்டும். நல்ல அரசியில் சமைத்து தர வேண்டும். எங்கள் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மளிகைப் பொருட்களைக் கொண்டு, நல்ல தரமான முறையில் உணவளிக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தின் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர், 20-க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து உள்ளார். அவர் அந்தக் குழந்தை தொழிலாளர்களை நேரில் சந்திக்கும் பொழுது அந்தக் குழந்தை தொழிலாளர்கள், ’’ஆசிரியர்கள் எங்களை தேர மாட்டாய், உருப்பட மாட்டாய் என திட்டியதால் தான் நாங்கள் பள்ளியை விட்டு வெளியேறி குழந்தை தொழிலாளர்களாக மாறினோம்’’ என தெரிவித்துள்ளார்கள். ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களை இதுபோல திட்டக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மாநில கல்விக் கொள்கை குறித்த தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அத்துடன் பாடத்திட்டங்கள், ஆசிரியர்-மாணவர்களுக்கான புரிந்துணர்வுகள், போட்டித்தேர்வுக்களுக்கு ஏற்ப வகையில் பாடத்திட்டங்களை வகுத்தல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களால் எடுத்துக்கூறப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.சிதம்பரம், மாநில கல்வி கொள்கை உறுப்பினர்கள் டாக்டர். எல்.ஜவஹர் நேசன், பேராசிரியர். ராமானுஜம், பேராசிரியர். சுல்தான் அகமது இஸ்மாயில், பேராசிரியர். ஆர்.சீனிவாசன், டாக்டர். அருணா ரத்தினம், பாலு, ஜெய்ஸ்ரீ தாமோதரன், செயலக உறுப்பினர் டாக்டர்.ஏ.கருப்பசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com