அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் அரசு இலவசப் பயிற்சி மையங்களில் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள் 1,615 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி ஒருமுறை தேர்வு எழுதுவதற்கு மட்டுமே அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொளப்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் படிக்கும் 300க்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளது.
தற்போது பள்ளிகளைத் திறப்பதற்கு சாத்தியக்கூறு இல்லை. அரசு வழங்கும் நீட் தேர்வு இலவசப் பயிற்சி ஒரு மாணவருக்கு ஒருமுறை மட்டுமே அளிக்கப்படும். இந்த தேர்வை இரண்டாவது முறை எழுதும் மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுத்தான் தேர்வு எழுதவேண்டும்" என்று குறிப்பிட்டார்.