நாட்டின் உயரிய பணியாகக் கருதப்படும் சிவில் சர்வீஸ் பணிகளின் முதன்மைத் தேர்வுக்கான இணையவழி இலவசப் பயிற்சி அக்டோபர் 5ம் தேதி முதல் ஆறு நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், அக்டோபர் 5 முதல் 10ம் தேதி வரை (சனி, ஞாயிறு நீங்கலாக) ஆறு நாள்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சி வகுப்புகள் மாநில அரசின் சார்பில் நடத்தப்படவுள்ளன. அந்த வகுப்புகள் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் நேரலையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் வழியே ஆர்வமுள்ள அனைவரும் இந்த வகுப்புகளில் இணைந்துகொள்ளலாம். தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்திய வரலாறு உள்பட பல்வேறு பாடத் தலைப்புகளில் மிகச்சிறந்த அறிஞர்கள் பங்கேறறு கருத்துரை வழங்கவுள்ளனர். இலவச இணையவழிப் பயிற்சி வகுப்புகள் காலை 11 முதல் பிற்பகல் 12.30 மற்றும் பிற்பகல் 2 முதல் 3.30 என்ற இருவேளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்யத் தேவையில்லை.