தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தாமதமாக தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் 30 ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்திமுடிக்கவேண்டும் என்றும் முதலாம் ஆண்டு வகுப்புகளை டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கலாம் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக, பொறியியல் படிப்புகளில் இன்னும் முதலாம் ஆண்டு வகுப்புகளும் தொடங்கப்படவில்லை. இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பை வெளியிட்டது.
ஐஐடிகள் மற்றும் என்ஐடிக்கள் உள்பட பொறியியல் படிப்புகளில் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொடர்பாக ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளை நடத்தலாம். மேலும் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி, சூழலுக்கேற்ப அட்டவணை மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.