அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜனவரி 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கட்டண விவரங்களை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு சேர ஆண்டுக்கு 13,610 ரூபாயும், B.D.S படிப்புக்கு 11,610 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள ESI மருத்துவக் கல்லூரியில் மட்டும் ஓராண்டுக்கான கட்டணம் 1 லட்சம் ரூபாய் ஆகும். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். பயில 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரையிலும், பி.டி.எஸ். படிப்புக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வில் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்த மாணவர், குறிப்பிட்ட காலத்துக்குள் சேரவில்லை எனில், அபராத கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல, படிப்பில் சேர்ந்த பின் இடையில் நின்றால் இடைநின்ற கட்டணமாக ஒரு லட்சம் ரூபாய் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டும்.