தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பி. ஆர்க் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, நாட்டா எனப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வை எழுதவேண்டும். இந்தத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பளிக்கும் வகையில் தமிழக அரசு திறனறிவு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
22 கட்டட அமைப்பியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பில் 1,520 இடங்கள் உள்ளன. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் www.tneaonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 8 ம் தேதி தொடங்கி செப்டம்பர் 20 ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதுவரை 2,600க்கும் அதிகமான மாணவர்கள் பி. ஆர்க் படிப்புக்கு விண்ணப்பம் செய்துள்ள நிலையில், டிப்ளமோ கட்டடவியல் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அவர்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் டிப்ளமோ மாணவர்களின் நலன்கருதி விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க ஆலோசனை நடத்திவருவதாக துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.