பொறியியலுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிந்திருக்கும் நிலையில் 72 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. அதேநேரம் 61 கல்லூரிகளில் 50% க்கும் அதிகமான இடங்கள் நிரம்பிவிட்டன.
அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய இரண்டாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு 9ஆம் தேதி நிறைவடைந்தது. 30,879 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்ற நிலையில் 20,363 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 65.95%. இதுவே கடந்த ஆண்டு 58.6% ஆக இருந்தது. இரண்டு சுற்றுகளின் முடிவில் 30,511 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் இருந்து வந்த 440 மாணவர்களுக்கும் இரண்டாவது சுற்றில் இடம் கிடைத்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு 295 மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்திருந்தது. இன்னும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 262 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் 3 மற்றும் நான்காவது சுற்றுகளில் 91,746 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். கலந்தாய்வின் முடிவில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்க வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர் கல்வியாளர்கள்.
கல்லூரிகளை பொறுத்தவரையில் இரண்டாம் சுற்றின் முடிவில்கூட 72 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. 306 கல்லூரிகளில் 10%க்கும் குறைவாகவே இடங்கள் நிரம்பியுள்ளன. அதில் 6 அரசுக் கல்லூரிகளும் அடங்கும். மீதமுள்ள 134 கல்லூரிகளில் 15 கல்லூரிகள் 90% அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. அதில் மூன்று சுயநிதி கல்லூரிகளும் அடங்கும். 26 கல்லூரிகள் 80% அதிகமாகவும், 61 கல்லூரிகளில் 50% அதிகமாகவும் நிரம்பியுள்ளன. முந்தைய சுற்றை போலவே இந்த சுற்றிலும் கம்ப்யூட்டர் சார்ந்த பிரிவுகளையே மாணவர்கள அதிகம் தேர்ந்தெடுத்துள்ளனர். இரண்டாம் சுற்றில் 36% மாணவர்கள் கம்யூட்டர் பிரிவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதேபோல சிவில், மெக்கானிக்கல் பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.