தமிழகத்தில் இனி 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என ஒரு அறிவிப்பு திடீரென வெளியானது. முதன்மை கல்வி அலுவலரின் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை மூலமே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் அமைச்சரோ, பொதுத்தேர்வு இல்லை என நேரடியாக கூறாமால், பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அமைச்சரவை கூடி முடிவெடுக்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசாணை பிறப்பித்தால் மட்டுமே , பொதுத்தேர்வு முறையை அமல்படுத்த முடியும் என்றும் கூறினார்.
பொதுத்தேர்வு என்ற அறிவிப்பின் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலையை பலரும் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களில் இடைநிற்றலை குறைக்கும் வகையில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அமலில் இருக்கிறது. இதனால் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு கட்டாயத் தேர்ச்சியை 5-ம் வகுப்பாக குறைக்க வேண்டுமென சொன்ன போது கூட, தமிழகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
தொலைநோக்கோடு செயல்படும் மாநிலமான தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஏன் பொதுத்தேர்வு வேண்டாமென ஆராய வேண்டியதும் கட்டாயம். தமிழகம் தற்போதுதான் பள்ளிக் கல்வியில் இடைநிற்றல் என்பது பூஜ்ஜியம் என்ற நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் 5-ம் வகுப்பிலேயே மாணவர்கள் பொதுத்தேர்வு என்ற எண்ணத்தில் நுழைக்கப்பட்டால், அது இடைநிற்றலை அதிகப்படுத்தும்.
அரசுப்பள்ளிகளை பொருத்தவரை , அங்கு பயிலும் மாணவர்களின் பொருளாதார சூழல் , குடும்பச் சூழல் முக்கியம். நகரங்களை கருத்தில் கொண்டே அளவீடு செய்து , அதன் மூலம் உருவாகும் திட்டங்களை கிராமத்து மாணவர்களிடம் திணித்தல் என்பது முறையானதாக இருக்காது. 5-ம் வகுப்பில் குழந்தை தேர்ச்சியில்லை என்றால் , படிக்கவே லாயக்கில்லை என ஒதுக்கும் எண்ணம் கொண்ட பெற்றோர் இப்போதும் உள்ளனர். படிப்பு தனது கௌரவம் என எண்ணுவோர் மத்தியில் தேர்ச்சியே கௌரவம் என எண்ணும் ஆட்கள் அவர்கள்.
மாணவர்களை பொருத்தவரை 5-ம் வகுப்பு என்பது பெரிய அளவில் அவர்களை சோதிக்காத ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள். ஆரம்பத்திலேயே பொதுத்தேர்வு கொண்டு வரும் போது, மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். அதோடு , ஒருவேளை தேர்ச்சி பெற முடியா சூழல் ஏற்பட்டால், கேலிக்கு ஆளாகும் நிலை இளம் வயதிலேயே ஏற்படும். இது உளவியல் ரீதியாக பிரச்னைகளை ஏற்படுத்தும். தேர்ச்சி அடையாமல் உளவியல் பிரச்னையை சந்திக்கும் நிலை சமீப காலத்தில் ஒரு தலைமுறைக்கு இல்லை. இப்போது திடீரென ஏற்படும் போது அதனை கையாள்வது என்பதும் பெற்றோருக்கும் கூட சிக்கலான ஒன்றாகவே முடியும். மாணவர்கள் தகுதியில்லாமல் பள்ளியை விட்டு வெளியேறுவது உண்மையென்றால், தரமான பயிற்றுமுறையை பள்ளிக்குள் கொண்டுவருவதுதான் ஒரு அரசின் கடமையாக இருக்க வேண்டுமே ஒழிய, படிக்க வந்தவனை பள்ளியை விட்டு விரட்டிவிடுவதல்ல.
திமுக, அமமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு மாணவனால் தனது பள்ளிக் காலத்தில் 5 முறை பொதுத்தேர்வை எதிர் கொள்ளும் சூழல் தமிழகத்தில் இல்லை என்பதும், பொதுத்தேர்வு முறையால் இடைநிற்றல் அதிகமாவதோடு , ஏழை மக்களுக்கு கல்வி என்பது எட்டாத தூரம் செல்லும் வாய்ப்பு அதிகம் என்பதும் எதிர்ப்பாளர்களின் வாதமாக இருந்தது.
ஆனாலும் அரசு தரப்பில் முறையான விளக்கமோ , பதிலோ கொடுப்பதில் வேகம் இல்லாத சூழலே இருந்தது, இந்நிலையில்தான் ஈரோட்டில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் “நடப்பாண்டில் 5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை” எனக் கூறினார். இதிலிருந்து பொதுத்தேர்வை அறிமுகப்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளது என்பது தெளிவு. ஆனால் அது தேவையில்லை என்பதுதான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.