‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர்கள் மதிக்க வேண்டும்’ என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் கேரள ஆளுநருமான சதாசிவம் உதகை ஜெ.எஸ்.எஸ். ஃபார்மசி கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நீர்வளம் அனைவருக்கும் பொதுவானது. எல்லாமக்களும் பயன்பெறும் வகையில், மாநில அரசுகள் நடந்து கொள்ள வேண்டும். கிழக்கு, தெற்கு, வடக்கு என்று பாகுபாடு கூடாது.
நீட் தேர்வை பொறுத்தவரையில், தமிழக முதல்வர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார். மாணவர்களும் நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆளுநர் தான் பல்கலைகழங்களின் வேந்தர். அவர்கள், துணை வேந்தர்களை தேர்வு செய்யும் போது, பல அறிஞர்களை கலந்து ஆலோசித்துதான் நியமிக்க வேண்டும். அதேசமயத்தில் மக்களால் தேர்ந்தெடுத்த அரசுக்கு, ஆளுநர்கள் மரியாதை கொடுக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.