அதிகரிக்கும் ஆர்வம் - பொறியியலில் எந்த பிரிவிற்கான கட் ஆஃப் உயர்ந்துள்ளது?

அதிகரிக்கும் ஆர்வம் - பொறியியலில் எந்த பிரிவிற்கான கட் ஆஃப் உயர்ந்துள்ளது?
அதிகரிக்கும் ஆர்வம் - பொறியியலில் எந்த பிரிவிற்கான கட் ஆஃப் உயர்ந்துள்ளது?
Published on

பொறியியலுக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியிருக்கும் நிலையில் எவ்வளவு கட் ஆஃப் உயரும்? எந்த பிரிவிற்கான கட் ஆஃப் அதிகம் உயர வாய்ப்புள்ளது எனப் பார்க்கலாம்.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டது. அறிவியல் பிரிவு மாணவர்களில் 30,600 பேர் 551க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருந்தனர். இது முந்தைய ஆண்டின் 1867ஐ விட 15 மடங்கு அதிகம். பொறியியல் படிப்புகளில் சேர 1,74,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,39,033 பேரிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.

தமிழகத்தில் உள்ள 440 கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களை நிரப்ப மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலும் வெளியாகி இருக்கும் நிலையில் கட் ஆஃப் மதிப்பெண் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு போட்டியில் 1,10,873 பேர் மட்டும் இருந்த நிலையில் இந்த ஆண்டு 1,36 ,973 பேர் உள்ளனர். அதாவது கடந்த ஆண்டை விட 26,100 பேர் அதிகம்.

கட் ஆஃப் உயர்வை பொறுத்தவரையில் 190-200 வரை 2 மதிப்பெண்கள் வரை கட் ஆஃப் உயர வாய்ப்புள்ளது. 180 முதல் 188 மதிப்பெண் வரையில் 11.5-27.5 வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 170 முதல் 178 மதிப்பெண் வரையில் 31.5 முதல் 46.5 வரையிலும், 160-168 கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு 49-61.5 மதிப்பெண் வரை உயர வாய்ப்புள்ளது. 150 மதிப்பெண்ணுக்கு கீழாக 70 வரை கட் ஆஃப் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 2 முதல் 70 மதிப்பெண்கள் வரை கட் ஆஃப் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கம்ப்யூட்டர் சார்ந்த பிரிவுக்கான கட் ஆஃப் அதிகம் உயரும் என கூறுகிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

150 கட் ஆஃப்க்கு மேல் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். பொறியியல் வரலாற்றிலேயே இந்த எண்ணிக்கை பதிவானதில்லை என கூறுகின்றனர் கல்வியாளர்கள். கடந்த ஆண்டு 100க்கு கீழ் 26,000 பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு 1,193 பேர் மட்டுமே உள்ளனர். 160-180 கட் ஆஃப் வரையில் 57,000 பேர் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு 14000 பேர் மட்டுமே இருந்தனர். கட் ஆஃப் அதிகரித்துள்ளது ஒரு புறம் இருக்க கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பொறியியலை நாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com