நாளை நடைபெற இருந்த பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “நாளை நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவு வெளியாவதில் காலதாமதம் ஆவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டபின், முடிவு வெளியாகும் தேதியிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து பொறியியல் கலந்தாய்வு தொடங்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், “இதற்கு முன்னர் சிபிஎஸ்சி பள்ளிகள் ரிசல்ட் அறிவிப்பது கால தாமதமான போது, பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நீட் முடிவு காரணமாக தாமதாமகிறது. மாநில அரசின் கொள்கை, மத்திய அரசின் கல்விக் கொள்கை திட்டத்தோடு இணைந்திருப்பதனால் இந்த சிக்கல் நீடிக்கிறது. மாநில கல்விக் கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பொறுத்துதான் முடிவெடுக்கவேண்டும் என்ற காரணத்தால் இந்த தொல்லைகள் எல்லாம் நமக்கு வந்து கொண்டிருக்கிறது.
இப்போதும்கூட நீட் தேர்வு முடிவுகள் 21-ம் தேதியே வந்துவிடும் என்று சொன்னார்கள். ஆனால், இன்னும் வராமல் காலம் தாழ்த்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டால், பொறியியல் படிப்பில் சேரும் பல மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு சென்றுவிடுவார்கள். அதனால்தான் சென்ற ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு இடங்கள் காலியாக இருந்தது. அதை கருத்தில்கொண்டே இப்போது இந்த முடிவு எடுக்கப்படுகிறது” என்றார்.