ஆன்லைன் வகுப்புகள்... ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வகுக்கப்படாதது ஏன்? - கல்வியாளர்கள்

ஆன்லைன் வகுப்புகள்... ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வகுக்கப்படாதது ஏன்? - கல்வியாளர்கள்
ஆன்லைன் வகுப்புகள்... ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வகுக்கப்படாதது ஏன்? - கல்வியாளர்கள்
Published on

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வரும் கல்வி ஆண்டுக்குள் வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ள இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகள் மூலம்தான் மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் பயிலும் மாணவர்களை கவனிப்பது மட்டுமின்றி, ஆசிரியர்களையும் கவனிக்க வேண்டும் என்பதை தெளிவாக்கியுள்ளது.

ஆன்லைன் வகுப்பின்போது, சீருடை அணிந்திருக்க வேண்டும், வகுப்புகளில் கலந்து கொள்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. ஆனால், ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகளோ, வழிகாட்டு நெறிமுறைகளோ வகுக்கப்படவில்லை. இதுபோன்ற சம்பவத்தின் மூலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பதை உணர்த்துவதாக கூறுகின்றனர், கல்வியாளர்கள்.

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக குழு ஒன்றை அமைத்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

முதல் அலை, இரண்டாவது அலை என கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், ஆன்லைன் வகுப்புகள் இன்னும் தொடர வாய்ப்பு உள்ளது. ஆகவே, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு சாட்டையை சுழற்றவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

கொரோனா தொற்று நோய் காரணமாக ஆன்லைனில் பயில்வது இன்னும் தொடரும் என்பதால் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் அரசு ஆகியவை இணைந்து விரைவில் தீர்வு காணவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com