அந்தியூர் மலைப்பகுதியில் உள்ள பழங்குடி மாணவர்களுக்கு போட்டித் தேர்வு தொடர்பாக ஆலோசனைகளையும் வாரந்தோறும் இலவச வகுப்புகளையும் வழங்கி வருகிறார் ஈரோடு மாவட்டம் சிந்தகவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டி. கலைவாணி. ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் உயரிய நோக்குடன் மலைவாழ் மாணவர்களுக்குக் கற்பித்த அனுபவத்தை நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.
"அந்தியூர் மலைப்பகுதியில் உள்ள தேவர்மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய காலம்தான் என் ஆசிரியப் பணியில் ஒரு திருப்புமுனை. நகர்ப்புறங்களில் பணியாற்றிய எனக்கு, இந்த மலைவாழ் குழந்தைகளின் மீது இனம்புரியாத பாசம் ஏற்பட்டது. முதல் ஆண்டிலேயே 488 மதிப்பெண்கள் பெற்று மாணவன் சிவராஜ் பள்ளியில் முதலிடம் பிடித்தான். மேலும் தேர்வு எழுதிய 72 மாணவர்களில் 24 பேர் நானூறுக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றார்கள்.
இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு வேறு பள்ளிக்கு விருப்ப மாறுதல் பெற்றேன். ஆனால், மக்களோ மீண்டும் அப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வரவேண்டும் என கல்வி இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்தார்கள். அதே பள்ளிக்குத் திரும்பினேன். நம் மீது இவ்வளவு பாசமும் மதிப்பும் கொண்டவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற எண்ணம் மனதில் துளிர்த்தது.
இங்கு பணியாற்றிய நான்கு ஆண்டுகளும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத்தர முடிந்தது. அடுத்து சிந்தகவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்தேன். நான் பள்ளியைவிட்டு வந்தாலும் மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி செய்வதைத் தொடர்ந்தேன். ஒவ்வொரு ஞாயிறும் பர்கூர் மலையில் உள்ள தாமரைக்கரை பழங்குடி மையத்திற்குச் சென்று ஆங்கிலம் மற்றும் கணித வகுப்புகள் எடுத்துவருவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
இங்கு வாழும் பழங்குடி மக்கள் நாகரிக வாழ்வின் எந்த ஒரு அடிச்சுவடும், வாழ்வாதாரமும் இல்லாத பரிதாப நிலையில் இருந்தார்கள். பள்ளிப்படிப்பை முடித்தும் கல்லூரி செல்லாதவர்களையும், கல்லூரிப் படிப்பை முடித்தும் வேலை கிடைக்காதவர்களையும் நிறைய பார்க்கமுடிந்தது. என்ன செய்வது என புரியாமல் தவித்தனர். எனவே, அவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள இலவசப் பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்தோம். நல்ல உள்ளங்களின் துணையுடன் தேவையான புத்தகங்களை இலவசமாக வழங்கிவருகிறோம்.
இந்த சேவையில் பள்ளி ஆசிரியரான என் கணவரும் இணைந்துள்ளார். மேலும் சில ஆசிரிய நண்பர்களும் கைகோர்த்துள்ளனர். இதன் மூலம் மலைக்கிராம பழங்குடி குழந்தைகளின் வாழ்வில் ஒரு பிரகாசமான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கல்விச் சேவையைப் பாராட்டி எனக்குக் கிடைத்துளள விருதுகளும் பாராட்டுகளும் பழங்குடி மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு விடியலை ஏற்படுத்துவதற்கான உந்துதலைத் தருகின்றன" என்றார்.