தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாட பகுதிகளையும் நடத்துவற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-21 ம் கல்வியாண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இல்லாமல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது. அதனால் பாடப்பகுதிகள் குறைத்து அறிவிக்கப்பட்டன. 2021-22 ம் கல்வியாண்டிலும் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் திறப்பு காலதாமதமானது. இதனால் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அந்த வருடத்திலும், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. அதன்படி,10-ம் வகுப்புக்கு 39 சதவீதம், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் என்ற விகிதத்திலும், 1முதல் 9 வரை 50 சதவிகித பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த கல்வியாண்டான 2022-23-ல் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் ஜூன் மாதம் துவக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கொரோனாவிலிருந்து நாடு மீண்டு இயல்புக்கு திரும்பியுள்ள நிலையில், தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் முழுப்பாடப்பகுதிகளும் புத்தகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு முழுப்பாடத்திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்துப் பாடப்பகுதிகளையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
- செய்தியாளர்: ரமேஷ்