அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உதவி பெறும் சில முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி தேர்வு அறிவிக்கப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு சில துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்த இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக முதுகலை மாணவர்கள் கூறுகின்றனர். இதனால் MBA மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா பாதிப்பால் சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 420 கல்லூரிகள் செயல்படும் நிலையில், அதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேரடித் தேர்வு அறிவிப்பால் இவர்களில் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். சில துறைகளுக்கு ஆன்லைன் தேர்வும், சில துறைகளுக்கு நேரடித் தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பேரிடர் போன்ற நெருக்கடியான காலகட்டத்தில், மாணவர்கள் கல்வி கற்கும் சூழலை மேலும் எளிமையாக்க வேண்டுமென்பதே கல்வியாளர்களின் பிரதான கருத்தாக உள்ளது.