இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), சென்னையின் ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மற்றும் ஆஷா பார் எஜுகேஷன் அமைப்புடன் இணைந்து கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பயிற்சியை அளிக்கும் வகையில் ஊரக தொழில்நுட்ப மையங்களை தொடங்கி வருகிறது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகம்மாசத்திரம், சீத்தஞ்சேரி ஆகிய கிராமங்களில் ஊரக தொழில்நுட்ப மையம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னை ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மற்றும் ஆஷா பார் எஜுகேஷன் அமைப்பு இதற்கான நிதியை வழங்கும்.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், நம் நாட்டின் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி, தொழில்நுட்பம் ஆகியவற்றை வழங்கும் வகையில் சென்னை ஐஐடி பணியாற்றி வருகிறது என்றார். மேலும், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன நிரல் மொழியை (Programming Tools) கொண்டு ஆஷா பார் எஜுகேஷன் அமைப்பு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொழில்நுட்பக் கல்வியை பயிற்றுவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மாணவ, மாணவிகளின் நிலை மதிப்பீட்டின் அடிப்படையில், அடிப்படை டிஜிட்டல் கல்வியறிவு, அடிப்படை நிரல்மொழி (Programming) ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அனிமேஷன், வலைப்பக்க வடிவமைப்பு, ட்ரோன்கள், 3டி பிரிண்டிங், ரோபாட்டிக்ஸ், மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவு ஆகியவை மாணவர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளதாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: PIB