தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் புதிய தலைமுறைக்கு ஏற்கெனவே பேட்டியளித்த உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் “ இந்த ஆண்டிற்கான தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்றும் . கல்லூரிகள் வரும் ஜூன் மாதத்தில் தான் திறக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது “ தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் அந்தக் கல்லூரிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படும். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் முழுவதுமாக கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும்” என அவர் கூறினார்.