தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்கு வருகை புரிகின்றனர்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இறுதியாண்டு இளநிலை மாணாக்கர்களுக்காக கல்லூரியை திறக்க தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. கல்லூரிகளுக்கு அருகே உள்ள உறவினர்கள் வீடுகளில் மாணவர்கள் தங்கி கொள்ளலாம் எனவும் கல்லூரியின் விடுதியில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் எனவும் தொற்று இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்கு வருகை புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு சானிடைசர் கொடுக்கப்படுகிறது. வெப்பமானி கொண்டு சோதனை செய்யப்படுகிறது. கையை நன்றாக கழுவிக்கொண்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து மாணவி ஒருவர் கூறுகையில், “முதலில் ஆன்லைன் கிளாஸ் கொஞ்சம் சிரமாக இருந்தது. அதன்பின்னர் அதுவே பழகிவிட்டது. ஆசிரியர்கள் அனைத்து பாடங்களையும் ஆன்லைன் வகுப்புகளிலேயே முடித்து விட்டனர். இப்போது தேர்வுக்கு தயாராக கல்லூரிக்கு வந்துள்ளோம். பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “அரசு வழிகாட்டுதல்படி அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து நேற்றே அறிவுறுத்திவிட்டோம். இரண்டு பிரிவுகளாக வகுப்புகளை பிரித்துள்ளோம். அரசு வழிகாட்டுதல் படி ஒரு நாளைக்கு 50 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே பாடங்கள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருநாள் தமிழ்வழிக்கல்வி, மறுநாள் ஆங்கிலவழிக்கல்வி என்பன முறையே வகுப்புகள் நடைபெற உள்ளது. மாணவிகள் எப்போது வர முடியுமோ அதற்கு ஏற்றவாறு இரண்டு பிரிவுகளாக வகுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.