7.5% இட ஒதுக்கீட்டில் தேர்வுபெறும் மாணவர்களுக்கு வரும் 18-ம் தேதி முதல்வர் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்குவார் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு சார்ந்த பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 440 கல்லூரிகள் உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்கள் அதிகம். இந்த 1,51,870 இடங்களுக்கு 1,39,033 உள்ளன. தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் நாளை தொடங்குகிறது. இடங்கள் நிரம்ப நிரம்ப 5 கட்டங்களாக கலந்தாய்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தெரிவித்திருந்த கல்லூரி விருப்ப அடிப்படையில் தேர்வு செய்யலாம்.
இந்த ஆண்டு 15,660 அரசு பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் மாணவர் வாய்ப்பு பெறுவார்கள். இவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை, வரும் 18-ம் தேதி அண்ணா பல்கலையில் துவக்கி வைக்கிறார். இந்த ஆண்டு புதிய கல்லூரிகள் துவங்க சாத்தியமில்லாததால், அடுத்த கல்வி ஆண்டு முதல் 21 கலைக் கல்லூரிகள் துவங்கப்படும்'' என்று தெரிவித்தார்.