தஞ்சை மாவட்டம் மேல உளூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் குடும்ப வறுமை மற்றும் சாதி பிரச்னை காரணமாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது தமிழகத்தில் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை தவிர்த்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டது மாணவர்களின் கல்வி என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் தமிழகத்தில் இது தொடர்பாக நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் இடைநின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தஞ்சையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சுமார் 1,500 குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரத்தநாடு தாலுகா மேல உளூர் கிராமத்தில் மட்டும் 75க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதிவாசிகளிடம் கேட்டபோது, குடும்ப வறுமை உள்ளிட்ட காரணங்களால் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவதில்லை என்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளி உள்ள நிலையில் தாங்கள் பிழைப்புக்காக வேலைக்கு காலை 6 மணிக்கே சென்றுவிடுவதால், குழந்தைகளை தயார்படுத்தி அனுப்ப முடிவதில்லை என தெரிவித்தனர்.
மேலும், எலி பிடிப்பது, ஊசிமணி விற்பது போன்ற வேலைகள் செய்து வாழ்க்கை நடத்தும் தங்களிடம், குழந்தைகளுக்கு உடைகள் வாங்கும் அளவிற்கு பொருளாதார வசதி இல்லை என்றும் பள்ளிகளுக்கு செல்ல விரும்பும் ஒருசில குழந்தைகள் கூட சக குழந்தைகளைக்கண்டு வீட்டிலேயே முடங்கி விடுவதாகவும் கவலை கூறினர்.
தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே பள்ளிக்கூடம் திறப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் பெரும் உதவியாக இருக்கும் என்று பழங்குடியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமாரை தொடர்பு கொண்டபோது, படிப்பில் ஆர்வம் குறைந்த மாணவர்கள், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே பள்ளி அமைப்பதற்கான முன்மொழிவுகள் அரசிடம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.