சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. மாணவர்களின் கோரிக்கை குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படாததால் பேராட்டத்தை தொடர மாணவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 47 நாட்களாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பதிவாளர் ஆகியோர் மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வருகின்ற 27ஆம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரை சந்தித்து உங்களது கோரிக்கையை வலியுறுத்தலாம் அதுவரை கலைந்து செல்லுங்கள் என்று தெரிவித்தனர். ஆனால் இதற்கான சரியான அறிவிப்பு வந்தால் மட்டும்தான் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என்று மாணவர்கள் சொன்னார்கள்.
இதற்கு முன்பாக மூன்றுமுறை மாணவர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மாணவர்களுக்கு சரியான உறுதி எதுவும் அளிக்கப்படாததால் மாணவர்கள் தற்போது தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தபோதே கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை அறிவித்ததோடு விடுதிகளை விட்டு மாணவர்களை வெளியேற்றி மின்துண்டிப்பு மற்றும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் போன்ற கடுமையான முடிவுகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொண்டது. உணவகங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான உணவை வெளியில் இருந்து கொண்டுவந்த சாப்பிட்டு வந்தனர்.
மாணவர்கள் தங்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி தேசிய மனித உரிமை ஆணையத்திலும் தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார்கள். இதனடிப்படையில் நேற்று இரவு முதல் மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் இதன்பிறகுதான் இதற்கான தீர்வு என்ன என்பது தெரியவரும்.