சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஐந்து பாடங்களுக்கு 350 ரூபாய் கட்டணமாக செலுத்தி வந்த பட்டியலின மாணவர்கள் இனி ஆயிரத்து 200 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணமும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஐந்து பாடங்களுக்கு 750 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி வந்த மாணவர்கள் இனி 1500 ரூபாய் செலுத்தவேண்டும்.
12ம் வகுப்பு தேர்வில் கூடுதல் பாடம் தேர்வு எழுதுவதற்கு பட்டியலின மாணவர்கள் இதுவரை கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பதை மாற்றி 300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பொதுப்பிரிவினர் செலுத்தி வந்த 150 ரூபாய் கட்டணமும் 300 ரூபாய் என இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தேர்வு கட்டணம் செலுத்தியவர்கள் அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்த தவறுவோர் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்இ கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டணம் உயர்த்தப்படாததால் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.