சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மொத்தம் 83.4% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வை 12.87 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 83.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தியாவில் அதிக தேர்ச்சி கொண்ட இடமாக கேரளாவின் திருவந்தபுரம் உள்ளது. அங்கு 98.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை பொருத்தவரை 92.93% பேர் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.
டெல்லியில் 91.87% மாணவர்கள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பெற்று உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா மற்றும் கரிஷ்மா அரோரா ஆகிய இரண்டு மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதற்கு அடுத்த படியாக மூன்று மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம் பிடித்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவிகிதத்தில் 88.7% மாணவிகளும், 79.4% மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.