சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
கொரோனா அபாயத்தை கருத்தில்கொண்டு நடப்பு ஆண்டிற்கான சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “ மாணவர்களின் உடல்நலனை கருத்தில்கொண்டு தேர்வு ரத்து முடிவை எடுத்தது வரவேற்கத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.
நடப்பாண்டிற்கான சிபிஎஸ்இ +2 தேர்வுகளை நடத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரும் கல்வித்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அதில் தற்போதைய கொரோனா சூழலில் தேர்வுகளை நடத்துவதன் நன்மை, தீமைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. மாணவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்றும், அதை எக்காரணம் கொண்டும் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றும் பிரதமர் கூறினார். எனவே இந்தாண்டுக்கான +2 பொதுத் தேர்வுகள் கைவிடப்படுவதாகவும் மோடி அறிவித்தார்.
தேர்வுகுறித்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். நெருக்கடி மிகுந்த இந்த தருணத்தில் தேர்வெழுத மாணவர்களை நிர்பந்திப்பது சரியாக இருக்காது என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார். இந்த சூழலில்தான் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்து அதன் அடிப்படையில் தேர்வை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ +2 தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதும் தேர்வுகள் நடத்த ஏற்ற சூழல் இல்லாததால் அவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சியை, குறித்த காலத்திற்குள் சிபிஎஸ்இ முடிவு செய்யும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.