’பேஸ் டிடெக்டர் பயன்படுத்தலாம்’..நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க சிபிஐ-ன் பரிந்துரைகள்

’பேஸ் டிடெக்டர் பயன்படுத்தலாம்’..நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க சிபிஐ-ன் பரிந்துரைகள்
’பேஸ் டிடெக்டர் பயன்படுத்தலாம்’..நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க சிபிஐ-ன் பரிந்துரைகள்
Published on

`பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகள், மென்பொருள்களை பயன்படுத்தி, நீட் தேர்வில் முறைகேடு நடக்காமல் தவிர்க்கலாம்’ சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கேரளாவை சேர்ந்த ரஷீத் ஜாமின் என்பவர், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், "நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக, பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கில் எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, நீட் தேர்வில் முறைகேடுகள், ஆள் மாறட்டத்தை தடுக்க எந்த வகையான நவீன முறைகளை கடைபிடிக்கலாம் என்பது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில்,

“* நீட் தேர்வு மையத்தில் ஒவ்வொரு தேர்வரையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

* தேர்வு மையத்தில் அறை கண்காணிப்பாளர், தேர்வரின் புகைப்படமும், அனுமதி சீட்டில் உள்ள புகைப்படமும் சரியாக உள்ளதா என்று சரி பார்க்க வேண்டும்.

* கண் விழித்திரை பதிவு, விண்ணப்பிக்கும் பொழுது கைரேகை பதிவு, தேர்வு மையத்தில் கைரேகை பதிவு மற்றும் கவுன்சிலிங்கின் போது கைரேகை பதிவு செய்யும் முறையை கொண்டு வர வேண்டும்.

* பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகள், மென்பொருள்களை பயன்படுத்தி நீட் தேர்வில் முறைகேடு நடக்காமல் தவிர்க்கலாம்.

* தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, சோதனை முறைகளை எளிதாக்கி, கண்காணிப்பை தீவிர படுத்தலாம்” என கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதி, வழக்கை உத்தரவிற்காக ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com