போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு.. மதுரை காவல்துறை விடுத்த எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு.. மதுரை காவல்துறை விடுத்த எச்சரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு.. மதுரை காவல்துறை விடுத்த எச்சரிக்கை
Published on

மதுரையில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த கோரி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 300 பேர் மீது தல்லாகுளம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டு, தொற்று குறைந்தபிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாகவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனக் கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினர் இதனிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து வகைக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்தது.

இந்த நிலையில், ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு மதுரை காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசின் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இனி பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரிகள் பொறியியல், கல்வியியல் மற்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஆப்லைனில் அதாவது நேரடியான தேர்வாக அமையும் என்று அறிவித்துள்ளார். எனவே, மாணவர்கள் இவ்விளக்கத்தினை ஏற்று தேர்வுகளை எழுதும்படி காவல் துறையினரால் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாணவர்கள் அதனை மீறி நடந்து அதனால் விளையும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டாம் எனவும் காவல்துறையினர் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இதனிடையே, ஆன்லைனில் தேர்வு எழுத அனுமதிக்க கோரி இன்று, காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மதுரையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்த கோரி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com