தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு தவிர, அனைத்துத் தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
ஆனால் மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் உண்டா இல்லையா என்பது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. அதுதொடர்பான முடிவையும் விரைவில் தமிழக அரசு வெளியிட்டால், மாணவர்களின் குழப்பம் தீரும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இறுதி செமஸ்டர் தேர்வு உண்டா?
இறுதி செமஸ்டர் தேர்வில் மாநில அரசின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி முடிவாக அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். எனவே இறுதி செமஸ்டர் பற்றி விரைவில் முதல்வர் அறிவிப்பார் என உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் கடைசியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பாலர் பள்ளிகள் முதல் உயர்கல்வி நிலையங்கள் வரையில் நாடு முழுவதும் மூடப்பட்டன. கல்லூரிகளில் தேர்வுகள் ஏப்ரல் மாதம் தொடங்கும் நிலையில், அதற்கு முன்பாக ஊரடங்கு தொடங்கிவிட்டது. அதனால் தேர்வுகள் நடத்துவது பற்றிய குழப்பம் நீடித்தது.
பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஆகிய அமைப்புகள் தேர்வு பற்றிய ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை மாநில அரசுகளுக்கு அளித்தன. அதையடுத்து, மாநில அரசுகள் கல்லூரி தேர்வுகள் குறித்து முக்கிய முடிவுகளை அறிவித்துவருகின்றன.
உயர்மட்டக்குழு பரிந்துரை
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தற்போதுள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது பற்றி ஆராய உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்தது.
கொரோனா தொற்று காரணமாக தேர்வு நடத்தமுடியாத நிலை உள்ளதாக அந்தக் குழு பரிந்துரை செய்தது. எனவே மாணவர்களின் நலன்கருதி, பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வழிகாட்டுதலின்படி மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பருவத்துக்கு மட்டும்…
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை படிப்பவர்களுக்கும், பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பவர்களுக்கும், முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இந்தப் பருவத்துக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இளநிலை பொறியியல் படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும், முதுநிலை பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் மாணவர்களுக்கும் இந்தப் பருவத்துக்கு மட்டும் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கல்வி ஆண்டுக்குச் செல்ல அனுமதிப்பது பற்றிய விரிவான அரசாணை உயர்கல்வித்துறை மூலம் விரைவில் வெளியாகும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
அரியர் தேர்வுகள் எப்போது?
மாணவர்கள் வைத்துள்ள அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது செம்ஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. மாணவர்கள் தேர்ச்சிபெறாத அரியர் தேர்வுகளை கல்லூரி திறக்கும்போது எழுத வைக்கப்படுவார்கள் என உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
அரியர் அல்லாத நடப்பு செமஸ்டர் பாடங்களுக்கு எப்படி மதிப்பெண்கள் அளிப்பது பற்றி ஆலோசனை நடந்துவருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இறுதி ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வு?
தமிழகத்தில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வின் முக்கியத்துவம் பற்றிய சில கல்வியாளர்களிடம் பேசினோம்.
டாக்டர் நவநீதகிருஷ்ணன், முன்னாள் இயக்குநர், நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம்
மேற்படிப்புகளுக்கும் வேலைவாய்ப்புக்கும் மாணவர்கள் முயற்சி செய்யும்போது நம்பத்தகுந்த அடிப்படைத்தேர்வாக ஃபைனல் செமஸ்டர் தேர்வுகள் பார்க்கப்படுகின்றன. அதை ஒரு எல்லைக்கோடாக வேலை அளிக்கும் நிறுவனங்கள் கருதுகின்றன. இன்டர்னல் அசெஸ்மெண்ட் மதிப்பெண்களைவிட தேர்வு மதிப்பெண்களுக்குத்தான் அதிக மதிப்பு அளிக்கப்படுகிறது.
செய்முறைத் தேர்வுகளை (மருத்துவம், வேளாண்மை தவிர மற்ற பிரிவுகள்) நடத்தமுடியாவிட்டால் பரவாயில்லை. முந்தைய செய்முறைத் தேர்வுகளை அடிப்படையாக வைத்து மதிப்பெண்கள் வழங்கலாம். முந்தைய முறையில் பிராக்டிக்கல் தேர்வை நடத்தமுடியாது. அதில் ஆபத்து அதிகம். தற்போது தேவையுமில்லை.
இறுதி ஆண்டுப் படிப்பில் புராஜெக்ட் மிகவும் முக்கியம். பொறியியல் படிப்புகளில் நேரடியாக தொழில் நிறுவனங்களுக்குச் சென்று புராஜெக்ட் செய்வார்கள். சிலர் டிசைன் செய்வார்கள். சிலர் மெட்டீரியல் பயன்படுத்தி செய்வார்கள். என்னைக் கேட்டால், வீட்டில் இருந்தே புராஜெக்ட் செய்யலாம். அவர்களுடன் புராஜெக்ட் சூப்பர்வைசர் ஆன்லைன் மூலம் தொடர்பில் இருக்கலாம். நேர்முகத் தேர்வுகூட ஆன்லைனில் நடத்தலாம்.
இறுதி ஆண்டு ஃபைனல் செமஸ்டர் தேர்வை ரத்து செய்தால், வேலைக்குச் செல்லும்போது 2020ல் முடித்த மாணவரா என்று எடைபோடும் நிலை ஏற்படலாம். சந்தேகத்துடன் பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுபோல மற்ற இடங்களில் அவர்களைப் பற்றி யோசிக்கலாம்.
மருத்துவம், வேளாண்மைப் படிப்புகள் மக்களுடன் தொடர்பில் இருப்பவை. பாதுகாப்புடன் அவர்களுக்கு பிராக்டிக்கல் தேர்வுகளை வைக்கலாம். ஏற்கெனவே அவர்கள் ரிஸ்க் உள்ள பணிகளைத்தான் செய்துவருகிறார்கள். அல்லது ஹவுஸ்சர்ஜன் பயிற்சிக்காலம் முடிந்த பிறகு பிராக்டிக்கல் தேர்வுக்கு நேரம் வழங்கலாம். அப்போது கொரோனா பரவல் முடிந்து நற்காலம் பிறந்திருக்கும்.
பொன். தனசேகரன், கல்வியாளர்
கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டுத் தேர்வுகளுக்குக் கூடுதலாக படித்திருப்பார்கள். அரியர் வைத்திருக்கும் தேர்வுகளை முடிக்க நினைத்திருப்பார்கள். சில மாணவர்கள் புராஜெக்ட் முடிக்காமல் இருப்பார்கள். எனவே இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்துசெய்யமுடியாது.
மேலும் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் இருப்பதால், உயர்படிப்புகளில் சேர்வதற்கான தகுதித்தேர்வுகளை எழுதமுடியாத நிலையில் மாணவர்கள் உள்ளார்கள். வேலைவாய்ப்புக்கும் முயற்சி செய்யமுடியாத குழப்ப நிலையே உள்ளது.
தேர்வை தாமதப்படுத்துவதால், வீண் மனஉளைச்சல்தான் ஏற்படும். அதைப் பற்றி தெளிவுபடுத்துவது காத்திருக்கும் இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு நல்லது. தேர்வை எப்படி நடத்தலாம், ஆன்லைன் மூலம் நடத்தலாமா என்பது பற்றிய நடைமுறைகளை உருவாக்கி அரசு உடனடியாக அறிவிக்கவேண்டும்.
சுந்தரபுத்தன்