கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய அரசு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.
நாட்டில் தினமும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, டெல்லியிலுள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள பிரியங்கா காந்தி, ரமேஷ் பொக்ரியாலுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் "இந்தியா முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர். இப்போதுள்ள நெருக்கடியான சூழலில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நடைமுறையில் சாத்தியமற்றது. இதனால் ஆபத்தில் இருப்பவர்கள் மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கூட.
தொற்றுநோய் வேகமெடுத்து பரவும்போது குழந்தைகளை இந்த தேர்வுகளுக்கு அமர கட்டாயப்படுத்துவதன் மூலம், எந்தவொரு தேர்வு மையமும் ஒரு கொரோனா ஹாட்ஸ்பாட் என்று நிரூபிக்கப்பட்டால், அரசாங்கமும் சிபிஎஸ்இ வாரியமும்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே அரசு இத்தேர்வுகளை ரத்துசெய்யவேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.