நாடு முழுவதும் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
பட்டியலின பழங்குடியின மாணவர்கள் பத்தாம் வகுப்போடு கல்வியை கைவிடும் போக்கை மாற்றும் வகையில் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பட்டியலின மாணவர்களின் மேல்நிலை படிப்பு மற்றும் உயர் கல்விக்கான கட்டணங்களை அரசே ஏற்கும்.
இதற்காக மத்திய அரசு ஒதுக்கிவந்த நிதி 10 சதவீதமாக குறைக்கப் பட்டதால், 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டியலின மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சுழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே நிதி பற்றாக்குறையால் 14 மாநிலங்களில் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகிறது.
தற்போது கமிட்டெட் லயாபிலிட்டி எனும் முறை போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்திற்கு பின்பற்றப் படுகிறது. அதாவது மாநில அரசு உதவித் தொகையை செலவழித்த பிறகு மத்திய அரசு அதனை வழங்கும். இந்த முறைப்படி செலவழிக்கப்பட்ட தொகையை பல ஆண்டுகளாக மத்திய அரசு மாநிலங்களுக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்து வருகிறது.
இதனால் ஏற்படும் நிதிச்சுமையை சமாளிக்க இயலாமல் பல மாநிலங்கள் மாணவர்களுக்கான உதவித் தொகையை நிறுத்திவிட்டன. டிசம்பர் மாதம் 4ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் பழனிசாமி, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 60, 40 என்ற வகையில் நிதியினை மத்திய மாநில அரசுகள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த முறைதான் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதே கோரிக்கையை பஞ்சாப், ஹரியானா, உத்ரகண்ட், ஜார்கண்ட், ஹிமாசல பிரதேசம், தெலங்கானா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்கள் வலியுறுத்துகின்றன. மாநிலங்களுக்கு நிதி பற்றாக்குறை நீடித்தால் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வி பகல் கனவாக மாறிவிடும் என்கின்றனர் அரசியல் கட்சி தலைவர்கள்.
பட்டியலின மற்றும் பழங்குடியின் மாணவர்களுக்காக மத்திய மாநில அரசுகள் கொடுக்கும் கல்வி உதவித் தொகை எவ்வளவு? அதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்னென்ன என்று பார்ப்போம்...
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசாங்கம் தனது வரவு செலவு திட்டத்தில் எஸ்.டி. எஸ்.சி மாணவர்களுக்கான கல்வி நிதியை ஒதுக்குகிறது. அப்படி ஒதுக்கும் நிதியை மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கிறார்கள். அதனடிப்படையில் 2018-19ஆம் ஆண்டில் எஸ்.டி எஸ்.சி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக 6,000 கோடியை ஒதுக்கியது. ஆனால் 2019-20 ஆம் ஆண்டில் வெறும் 3,000 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது.
மாநில அரசு 2017-18 ஆம் ஆண்டில் 1689.34 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது. அதேபோல மத்திய அரசு 2017-18 ஆம் ஆண்டில் 162.88 கோடியை ஒதுக்கியிருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசு 1910.19 கோடி ரூபாயும், மத்திய அரசு 383.73 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது. 2019-20 ஆம் ஆண்டில் மாநில அரசு 2005.70 கோடி ரூபாயும், மத்திய அரசு 479.24 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இந்த புள்ளி விபரங்களின்படி பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசும் மத்திய அரசும் அதிகமாக ஒதக்கியுள்ளது போல் தெரிகிறது. ஆனால் இதில் மத்திய அரசுடைய பங்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகமான தொகையை ஒதுக்குவது போல் தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாக எஸ்.டி எஸ்.சி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஒதுக்குவது குறைவாகவே இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதுதொடர்பாக புதியதலைமுறை 360° நிகழ்ச்சியில் இதுதொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
கேள்வி: பொதுவாக இந்த போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகையை பற்றி பல தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். ஒட்டுமொத்தமான புரிதலிலும் தங்களது சந்தேகங்களை முன்வைக்கிறார்கள். இதில் நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் என்னென்ன இதில் நீங்கள் விமர்சனங்களாக பார்க்கக் கூடிய பார்வைகள் என்ன?
எவிடன்ஸ் கதிர் (சமூக செயற்பாட்டாளர்)
பதில்: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று 1946ஆம் ஆண்டு பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில் டாக்டர் அம்பேத்கர் சொல்லியிருந்தார். அதன்படி அரசாங்கத்தின் மூலமாக கல்வி உதவித்தொகை கொடுக்கப்பட்டது. போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர் ஷிப் எஸ்.டி எஸ்.சி மாணவர்களுக்கு மட்டுமல்ல சிறுபான்மை மற்றும் பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் இது பொருந்தும்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசாங்கம் ஒதுக்கும் தொகை மிக மிக சொற்பத்தொகை. 1500 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டிய இடத்தில் இப்ப சொற்ப தொகை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம் எதில் எதில்தான் கைவைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடே இல்லை. அதுவும் எஸ்.டி எஸ்.சி கல்வி உதவித் தொகையில் கை வைத்துள்ளது.
போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர் ஷிப்க்கும் மற்ற ஸ்காலர் ஷிப்க்கும் வித்தியாசம் இருக்கிறது. மற்ற கல்வி உதவித்தொகை பணம் ஒதுக்குவதில் இவ்வளவுதான் என்ற அளவு இருக்கும் ஆனால் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு எவ்வளவு வேண்டுமானலும் பணம் ஒதுக்கலாம். 2016-17ல் தமிழக அரசு 37,000 எஸ்.டி எஸ்.சி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கப்படவில்லை என எஸ்.டி எஸ்.சி கமிசன் சொல்லியிருக்கிறது.
மாணவர்களுக்கு கல்வித் உதவித் தொகையை ஒதுக்குவதில் மத்திய மாநில அரசு இரண்டுக்குமே பொறுப்பு இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி 60, 40 என்று பிரிக்கிறார். ஆனால் 60 சதவீதம் ஒதுக்க வேண்டிய மத்திய அரசு 10 முதல் 15 சதவீதம் மட்டுமே ஒதுக்குகிறது. எஸ்.டி எஸ்.சி மாணவர்களின் கல்வியில் நீங்கள் ஏன் கை வைக்கிறீர்கள் இது எவ்வளவு பெரிய அவலம்.
எஸ்.டி எஸ்.சி மாணவர்களின் கல்வி உதவித் தொகையை குறைத்துவிட்டு இப்ப எல்லோருக்கும் அதாவது எப்.சி-க்கும் சேர்த்து தகுதியின் அடிப்படையில் ஸ்காலர் ஷிப் வழங்கப்படும் என்று சொல்கிறார்கள். கல்வியில் தகுதியை தீர்மானிப்பது மிகப்பெரிய அபத்தமான ஒன்று. பட்ஜெட்டில் எஸ்.டி எஸ்.சி மக்களுக்கு ஒதுக்கக் கூடிய தொகை அனைத்திலும் மத்திய அரசு கை வைத்து வருகிறது.
கேள்வி: புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் கூட போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர் ஷிப்க்காக ஒதுக்க கூடிய தொகையை பாதிக்கு பாதியாக ஆளும் மோடி அரசாங்கம் குறைத்துள்ளது. இந்த மக்கள் படித்து மேலே வருவதை விரும்பாமல் திட்டமிட்டு செயல்படுவதாக அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
அஸ்வதாமன் (பாஜக)
பதில்: இந்த விமாசனம் அடிப்படையற்ற ஒரு விமர்சனம். இந்த கல்வி உதவித் தொகையை ஷேரிங் சிஸ்டத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்று 2019ல் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. அந்த திட்டத்தின் படி 60 சதவீதம் மத்திய அரசில் இருந்தும் 40 சதவீதம் மாநில அரசில் இருந்தும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம்.
இந்த திட்டத்திற்காக 2018ஆம் ஆண்டே விவாதம் நடத்தப்பட்டது. கல்வியை பொருத்தவரை மத்திய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் நிதி வந்து கொண்டிருக்கிறது. அது மக்களுக்கு வெளியே தெரியாது. உதாரணத்துக்கு தமிழகத்தில் 5ஆம் வகுப்புவரை இருக்கக் கூடிய பல அரசுப் பள்ளியின் கட்டிடங்கள் எஸ்.எஸ்.ஏ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழும், 10ஆம் வகுப்புவரை இருக்கும் கட்டிடங்கள் ஆர்.எஸ்.ஏ என்ற திட்டத்தின் கீழும் கட்டப்படுகிறது.
11 மற்றும் 12ஆம்; வகுப்பு கட்டிடங்கள் நபார்டு வங்கி நிதியின் மூலமாக கட்டப்படுகிறது. இது மாநில அரசு நிதியில் இருந்து கட்டப்படுவதாக மக்களிடம் சென்றடையும் இது இயல்பான ஒரு விசயம். கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக மத்திய அரசு பணம் ஒதுக்கும் போது 60 சதவீதம் ஒதுக்க வில்லை. 10 சதவீதம் தான் ஒதுக்கி இருப்பதாக சொல்வது அபத்தமான குற்றச்சாட்டு.
கல்வி உதவித்தொகை வழங்குவதில் சந்தேகமாக அல்லது சந்தேகம் வேண்டுமென்றே எழுப்பப்படுகிறதாக என்ற சந்தேகம் எழுகிறது. போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர் ஷிப்பையும், புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கல்வி தகுதியின் அடிப்படையில் தரப்படுகின்ற வேறுஒரு ஸ்காலர் ஷிப்பையும் சேர்த்து குழப்பிக் கொள்வதால் இந்த சந்தேகங்கள் வருகிறது.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகிறது. அதேபோல தகுதியின் அடிப்படையில் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கொடுக்க கூடியது தனி ஸ்காலர் ஷிப். இது இரண்டும் வேறு வேறு. இதில் மத்திய அரசு தொகை ஒதுக்குவதில் தாமதம் ஆனால் தொகையை குறைத்து விட்டதாக பேசுபவர்கள் மாநில அரசு நிதி ஒதுக்காத போது இவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.