தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கொரோனா தொற்று காரணமாக மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 95 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்த மாணவர்களுக்கான தரவரிசை மற்றும் தேர்வுபட்டியலை அந்தந்த கல்லூரி இணையதளம் மற்றும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் மாணவர்களுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தேர்வுப் பட்டியலை வெளியிட்ட கல்லூரிகள், வெள்ளியன்று சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தி முடித்துள்ளது.
அதைத்தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 29) பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடங்கியுள்ளன. செப்டம்பர் 4 ம் தேதி வரை முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள், கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் வழிகாட்டுதலில் நாளை முதல் (ஆகஸ்ட் 31) முதல் தொடங்கப்படவுள்ளன. இந்த நிலையில், மாணவர் சேர்க்கைப் பணிகள் அரசு கலைக்கல்லூரிகளில் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.