தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையைத் தொடங்காமல் இருப்பது பெற்றோர்களுக்குத் தவிப்பையும் ஆசிரியர்களுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார். “கல்வியாண்டின் முதல் பருவம் முடியப்போகும் தருவாயில்கூட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாமல் இருப்பது மிக வருத்தமாக இருக்கிறது” என்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.
இந்த அசாதாரண சூழலிலும் எப்போதும்போல தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று இணைய வழிவகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏதோவொரு வகையில் மாணவர்கள் படிப்புடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். ஆனால் வேலையிழந்து பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள குறிப்பட்ட சதவிகித பெற்றோர், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்காக காத்திருக்கின்றனர்.
மற்றொருபுறம் நோய்த்தொற்று காரணமாக சொந்த ஊருக்கு குடிபெயர்ந்துள்ள ஏராளமான குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது நடக்கும் என தவித்துவருகின்றனர். பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்ற நிலையில், பதினோராம் வகுப்புச் சேர்க்கையும் தொடங்கப்படவில்லை.
மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையில் ஏமாற்றங்களை உணர்ந்து வருகின்றனர் பெறறோர்கள். மேலும் அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பியுள்ள மாணவர்களும் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடன் நாட்களை நகர்த்திவருகின்றனர். எனவே மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளிக்க வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.