தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என உயர்க் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 92 ஆயிரம் இடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு 3 லட்சத்து 12,833 மாணவ, மாணவிகள் இணையவழியில் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து அந்தக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு மாணவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதியுள்ள பாடப்பிரிவுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டால், அதை கண்டறிந்து அந்த மாணவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது விருப்பத்தின் அடிப்படையில் ஒப்புதல் பெற்று ஒதுக்கீட்டு ஆணை தயார் செய்யவேண்டும்.
ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு அந்த விவரத்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலமாகவும் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள், கட்டண விவரங்களையும் தெளிவாகவும் தெரிவிக்கவேண்டும்.
பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும். மாணவர் சேர்க்கைக்கான கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்த வசதிகளை கல்லூரி முதல்வர்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.
மாணவர் சேர்க்கையின்போது கொரோனா பரவல் தொடர்பாக, நடைமுறையில் உள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு முறைகளைத் தவறாது பின்பற்றுவதை கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்யவேண்டும். மாணவர் சேர்க்கை மையங்களுக்கு பெற்றோர்களை அழைத்துவர வேண்டாம் என அறிவுறுத்தவேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.