தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மீதமுள்ள காலியிடங்களுக்கு அக்டோபர் 12 ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதாவது, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் இலவசமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். முதல்கட்டமாக ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளிட்ட பிரிவினர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் குலுக்கலின்றி தேர்ந்தெடுக்கப்படும்.
பின்னர் மீதமுள்ள இடங்களுக்கு ஒரு கி.மீ. தொலைவிற்குள் வசிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளின் விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்தப்படும். தற்போது தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் எஞ்சியுள்ள இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தற்போது மீதமுள்ள இடங்கள் பற்றிய பட்டியலை, தகவல் பலகையில் அக்டோபர் 10 ஆம் தேதியன்று ஒட்ட வேண்டும். அடுத்து, குழந்தைகளின் பெற்றோர் இணையதளம் வழியாக அக்டோபர் 12 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பிறகு தகுதியான விண்ணப்பங்கள், தகுதியற்ற விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை, அந்தந்தப் பள்ளிகளின் தகவல் பலகையில் நவம்பர் 11 ஆம் தேதி வெளியிட வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும் பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
சேர்க்கைக்குத் தகுதியான மாணவர்களின் பட்டியலை பள்ளித் தகவல் பலகையில் வெளியிடுவதோடு, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.