குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதா என்ற சந்தேகம் ஏற்கெனவே எழுந்த நிலையில் 2017-18 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதியவர்கள் முதல் நூறு இடங்களை பிடித்தது எப்படி என ஏற்கனெவே கேள்வி எழுந்துள்ளது. குரூப் 4 தேர்வில் அனைத்து முன்னிலை ரேங்க்குகளையும், ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதியவர்களே பெற்றிருப்பதால், இந்த மையங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
இந்நிலையில், குரூப் 2ஏ தரவரிசையின் 50 இடங்களில் 30 பேர் ராமேஸ்வரத்தில் குறிப்பிட்ட ஒரு மையத்தில் தேர்வெழுதியவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முறைகேடு நடந்துள்ளதா என கேள்வி எழும்பியுள்ளது.
2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வுக்கான முடிவு 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து சான்றிதழ் பதிவேற்றம், சரிபார்ப்பு முடிவடைந்து கலந்தாய்வு நடத்தி பணி ஆணையும் பெற்றுவிட்டதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறுகையில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை எனவும் ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவை வெளியிட முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.