தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்கிய அரணையை எதிர்த்த மனுக்களின் மீது இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது சாதிவாரியான ஒதுக்கீடு இல்லை, மாறாக இது அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீடு. மேலும் இது மருத்துவ படிப்புக்கான ஒரு நுழைவு கருவி மட்டுமே. மேலும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த ஒதுக்கீடு சரியானதே என வாதிட்டார்.
அப்போது பேசிய நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், இது சாதி ரீதியிலான இடஒதுக்கீடு முறை இல்லை என கூறுகிறீர்கள், ஆனால் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவருக்கு குறிப்பிட்ட சதவிகித இடத்தை வழங்கி முன்னுரிமை கொடுப்பது ஒதுக்கீடு முறை தானே ? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு, சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் 2017ல் இருந்து இட ஒதுக்கீடு வழங்கவில்லை, எனவே அதையே தொடர வேண்டும், இந்த ஆண்டும் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு கூடாது என வாதிடப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பு ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு முறை கூடாது என கூறியுள்ளது. எனவே அதையே இந்த விவகாரத்தில் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தனர். பல்வேறு தகுதியுடைய தனியார் மருத்துவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது..